பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


வேறுபாட்டினையும் அறுத்துத் தொண்டனாகிய யான் திருவருளாற் பொருந்தப்பெற்ற தியானநிலையிலே தியானப்பொருளாகிய தாமும் தியானிப்பானாகிய யானும் தியானித்தலாகிய அறிவும் என்னும் வேற்றுமையற என்னோடு உடனுறைவர். இத்தகைய தியான நிலை முதிரவருகின்ற நிலையில் ஞேயத்தழுந்தல் (சிவபரம்பொருளில் இரண்டறக் கலந்தின்புறுதல்) ஆகிய பேரின்பவிளைவுமாய் நிற்பர். பிராரத்தவினை யாலே எனது தியான ஒருமை சிறிது குலைய உலகப் பொருள்களுள் ஒன்றினைக் காண நேர்ந்தால், உலக வாதனை என்னைத் தாக்காதவாறு காண்பானுங் காணப்படுபொருளுந் தாமேயாய் எனது உள்ளும் புறம்புங் கலந்து நிற்பர் எ-று.

இதன்கண் "உற்றதியானத்துடனுறைவர்” என்றதொடர், திருவுந்தியாரில் உள்ள “அண்டமுதலாம் அனைத்தையும் உட்கொண்டு” என்ற தொடர்ப் பொருளையும், “முற்றவரின் மாட்சியுமாய் நிற்பர்” என்ற தொடர் “குறைவற்ற செல்வம்’’ என்ற தொடர்ப்பொருளையும், “யான் மற்றொன்றைக் கண்டிடின் அக்காட்சியுமாய் நிற்பர்” என்ற தொடர் “கொண்டதைக் கொள்ளாதே” எனக் குருவாய் நின்று அறிவுறுத்தியதற் கேற்பக் கொண்டதைக் கொள்ளாதிருக்கும்படி உள்ளும்புறம்பும் உடனிருந்து உதவிசெய்தலாகிய அருளுபகாரத்தையும் விரித்து விளக்குதல் காண்க.

“இது தீக்கைக்குப் பின்பு (ஆசிரியன்) உண்மை நிலையிலே நிறுத்தின நிலைமையை அறிவித்தது” என்பர் தில்லைச்சிற்றம்பலவர்


96. ஆளுடையா னெந்தரமும் ஆளுடையா னேயறியுங்
தாளுடையான் தொண்டர் தலைக்காவல்-நாளுந்
திருவியலு ராளுஞ் சிவயோகி யின்றென்
வருவிசையை மாற்றினான் வந்து.

இது, தம்மை ஆட்கொண்டு மெய்யுணர்வு நல்கிய அருட்குருவினது திருப்பெயரையும் அவரது திருவருட் பெருமையினையும் உணர்த்துகின்றது.

(இ-ள்) பக்குவ ஆன்மாக்களை ஆட்கொள்ளும் இயல்பினனாகிய இறைவன், யாதொரு தகுதியுமில்லாத என்னளவும் ஆளுடைய தேவனாகவே எழுந்தருளினான். எல்லாவற்றையும் இருந்தாங்கே யறியவல்ல திருவருளையுடையனாகிய அம்முதல்வன், தன்பால் தொண்டுபூண்ட அடியார்களை இருவினைகளின் வாதனை வந்து தாக்காதவாறு பாதுகாத்தருளும் முதன்மையான காவலனாகவுள்ளான். எக்காலமும் திருவியலூரைத் திருப்படை வீடாகக் கொண்டருளிய