பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


௪௩. காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற
வறட்டுப் பசுக்களென் றுந்தீபற.

இது, குருவின் அருளால் தன் செயலற இறைவன் திருவருள்வழி நில்லாது உலகச் சார்பினையே தமக்குச் சார்பாகக் கொண்டு நிற்பாரது நற்பேறின்மையை நினைந்து இரங்குகின்றது.

(இ~ள்) உடம்பினுள்ளே கோயில் கொண்டருளிய இறை வருடைய உண்மை ஞானமான திருவடித் தாமரையில் ஊற்றெடுக்கும் பேரின்பத் தேனாகிய அமுதையுண்டு உலகத் தொடர்பறத் தாமும் சிவமும் வேறாகாமல் சிவமேயாய் இரண்டறக் கலந்து மகிழும் இன்பவாழ்வினைத் தலைப்படாது பொய்யாய் உள்ளிடில்லாத உலகத்தையும் உலகப் பொருள்களையும் மெய்யென நம்பி வஞ்சனையை விளக்கும் நன்றுந் தீதுமாகிய கள்ளினையுண்டு மன மயக்கமுற்றார்கள், அத்தகையவர்கள் ஒரு காலத்திலும் தனக்கும் பிறர்க்கும் பயன்படப் பால்சுரவாத வறட்டுப் பசுக்களையொப்பர் என்றறிவாயாக எ-று.

உயிர்க்குயிராகிய இறைவன் அன்பினால் தன்னை வழிபடும் அடியார்களின் உடம்பினையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருந்து அவர்தம் உள்ளத்தே தேனையும் பாலையுங் கன்னலையும் அமிழ்தத்தையும் ஒத்துத் தனது ஞான ஆனந்தமாகிய அருளாரின்பத்தேறலைச் சுரந்தருளுதலால் பரங்கருணையாகிய அவ்வமுதத்தை உருகிப்பெருகி யுளங் குளிர முகந்து கொண்டு பருகியின்புறாது உலகவாதனைகளிற் சிக்குண்டு பொய்மையே பெருக்கி வாழ்நாளை வீணாளாக்குகின்றார்களே என இரங்கும் முறையில் அமைந்தது, இத் திருவுந்தியாராகும். அண்டங்கடந்த இறைவன் மன்னுயிர்களின் உடம்பினையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய திறத்தை,

'இறைவனே நீயென் உடலிடங்கொண்டாய்” (கோயிற்றிருப்பதிகம்-5)

எனவும்,

தினைத்தனை யுள்ளதோர் பூவினிற் றேனுண்ணாதே
நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறு மெப்போதும்
அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே சென்றுாதாய் கோத்தும்பீ.
                                                              (திருக்கோத்தும்பி)

எனவும் வரும் திருவாசகத் திருமறையால் நன்குணரலாம். தேனும் இன்னமுதுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமானது திருவருட்குரியராய்த் தற்போதங்கெட அம்முதல்வனை இடைவிடாது நினைந்துருகும்