பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

15


(இ - ள்) கட்புலம் காண எழுந்தருளிய ஆசிரியரைப் பற்றி நின்று தம்முடைய வினைத் தொடர்பு அறுத்தவர்கள் தாம் எடுத்துள்ள உடம்பின் வழிப்பட்டு ஐம்பொறிகளின்வழிச் செல்லமாட்டார்கள். இத்தகையோர்க்கு மேலும் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லையென் றறிவாயாக. எ-று.

கண்டது-காணப்பட்டதாகிய ஆசிரியத்திருமேனி. ‘கண்டதை’ எனற்பாலது கண்டத்தை என ஒற்றிரட்டித்து நின்றது. இனி கண்டு அத்தைக் கொண்டு எனப்பிரித்து, “மெய்யுணர்வளித்தற் பொருட்டு எழுந்தருளிய குருவின் அருளால் அறிவிக்க அறியும் ஆன்மாவாகிய தன்னையும் தன்னின்வேறாகிய பாசங்களையும் உயிர்க்குயிராய் உள் நின்றுணர்த்தும் இறைவனையும் உள்ளவாறு கண்டுணர்ந்து, அம் மெய்யுணர்வு உபதேசத்தினால் தம்முடைய பாசமாம் வினைப்பற்று அறுத்தவர்கள்” எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும்; அத்தைக் கொண்டு - அதனைக்கொண்டு; அதனால் கருமம் முடித்தலாவது, ஆசிரியன் செய்யும் தீக்கையினுல் சஞ்சிதகன்மம் எனப்படும் பழவினையையும் தம் உடம்பினுள் முகந்துகொள்ளப்பட்ட பிராரத்த கன்மமாகிய நுகர்வினையையும் ஆசிரியனது அருள்நோக்கினல் ஆகாமிய கன்மமாகிய வருவினையையும் அறவே அகற்றுதல். பிண்டம்-உடல். பிண்டத்தில் வாராமையாவது, தாம் எடுத்துள்ள உடம்பின் வாதனைவயப்பட்டுப் புலன் வழி போகாது ஆசிரியன் அறிவுறுத்தவண்ணம் இறைவன் திருவருள்வழி நிலைத்து நிற்றல்; இங்ஙனம் குருவினருளால் மெய்யுணர்வு கைவரப்பெற்றவர்கட்கு வினைத்தொடர்பு முற்றிலும் அற்றொழியவே பிறவாப் பெருநிலையாகிய வீடுபேறு அடைதல் உறுதியென்பதுணர்த்துவார், பிறப்பிறப் பில்லை என்றருளிச் செய்தார்.


8. கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்த தென்னாதே-அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவுஞ் சென்றறியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று.


இது, மேற்குறித்த திருவுந்தியார் பாடற் பொருளை விரித்து விளக்கு கின்றது.

(இ-ள்) காணப்பட்ட திருமேனியாகிய ஆசிரியனது மெய்யுணர்வுபதேசத்தின் துணை கொண்டு தம்முடைய தற்போதங்கெட வினைத் தொடக்கு அறுத்தவர்களே, ஞானத்திரளாய் நின்ற பொருள் அண்டத்திற்கு உள்ளேயுள்ள தென்றும் புறம்பேயுள்ள தென்றுங் கொள்ளாமல் அது தத்துவங்கடந்து அவற்றைச் செயல்படுத்து