பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


நிலையில் தத்துவங்களுக்குத் தத்துவமாய் உள்ளும் புறம்பும் நிற்கும் முறைமையும் உயிர்க் குயிராய் எல்லாரறிவுகளிலும் கலந்து அறிந்து அறிவித்து நிற்கும் முறைமையும் உணர்ந்து தாமும் இந்த நிறைவுடைய அறிவாய் ஒன்றுபட்டு நிற்கவே அவர்களுக்கு இப்பேரறிவினோடு ஒற்றித்து நின்ற பெற்றியாலே அவர்களே இப்பொழுது எல்லாப் பொருள்களையும் உள்ளவாறு கண்டு குறைவிலா நிறைவாய் நிற்கின்ற ஞானப்பெருஞ் செல்வத்தினர் எ-று,

இன்று குருவினால் ஆட்கொள்ளப் பெற்ற இப்பொழுது; "அண்டத்தின் அப்புறத்த தென்னாதே' என்பதனை அண்டத்தினது அப்புறத்தது என்னாது என இரு தொடராகப் பகுத்துரைக்க; அண்டத்தினது - அண்டத்திற்கு உள்ளேயுள்ளது. அப்புறத்தது - அண்டத்தின் புறத்தேயுள்ளது, என்றது, ஞானத்திரளாய் நின்ற பொருளை. இனி அண்டத்தினது என்றது. சீவன் முத்தியையும், ‘அப்புறத்தது’ என்றது. பரமுத்தியையும், 'ஆரறிவும் சென்றறியும் எப்புறமும்’ என்றது ஞானிகள் பொருந்தியறிகின்ற பதிபசு பாசங்களாகிய முப்பொருள்களையும் குறித்தன எனக்கொண்டு, “சீவன் முத்தித் தன்மையுடையது இது பரமுத்தித்தன்மையினையுடையது இது என்று இரண்டு தன்மையினையும் இடையிட்டுக் காணாமல் பரமுத்தியையும் சீவன்முத்தியையும் எல்லா ஞானவான்களுடைய அறிவும் பொருந்தியறிகின்ற திரிபதார்த்தங்களையும் இப்பொழுதே மயக்கமற அறிந்தவர்கள் எனப்பொருள் வரைந்து “ஆன்மபோதம் இறந்தா லொழியச் சுபாவதெரிசனம் உண்டாகாது என்பது கண்டுகொள்க” எனக்கருத்துரை பகர்வர் பழையவுரையாசிரியர். கட்புலனாக எழுந்தருளிய ஆசிரியத் திருமேனியே உயிர்களின் வினைத் தொடக்காகிய பாசப்பிணிப்பினை அகற்றவல்லதென்பது, -

“பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” (சிவபுராணம்)

எனவும்,

 “பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
          பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை யுகந்தென் சிந்தையுட் புகுந்து
          பூங்கழல் காட்டிய பொருளே”

எனவும் வரும் திருவாசகத் தொடர்களால் இனிது புலனாம்.


௪. எங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அங்ங னிருந்ததென் றுந்தீபற
அறியும் அறிவதன் றுந்தீபற.