பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

21


‘தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத்
தன்னுணரத் தன்னுள் இருத்தலால்-தன்னுணரும்
நேசத்தார் தம்பால் நிகழுந் ததிநெய்போல்
பாசத்தார்க் கின்றாம் பதி’

(சிவஞானபோதம்-வெண்பா 76)

என வரும் பாடலில் மெய்கண்டார் ஏதுக்களால் இனிது விளக்கியுள்ளமை காணலாம்.

“சிந்தனைக்கு எட்டாத சிவபரம்பொருள் உலகத்துள்ளார் தன்னை யுணர்தல் வேண்டித் திருநீறு கண்டிகை முதலிய திருவேடமாகிய தனது வடிவத்தைத் தன்னடியார்க்குக் கொடுத்தலானும் சிவஞானிகளாகிய அன்பர்கள் தன்னைச் சிவோகம் பாவனையால் தன்னையறியச் செய்தலானும் அவ்வாறு ஒரு குறியின்கண் நின்றுணரும் அவ் வடியார்களைத் தனது திருவருட்பரப்பினுள் இருக்கும்படி செய்தலானும் தன்னை இடைவிடாதுணரும் அன்புடைய அடியார்களிடத்துத் தயிரின்கண் நெய்போன்று இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவன். அவ்வியல்பில்லாத பாசப்பிணிப்புடைய ஏனையோ ரிடத்துப் பாலின் கண்ணதாகிய நெய் போன்று விளங்காது மறைந்து நிற்பன்” என்பது இதன் பொருளாகும்.

உயிர்க்குயிராகிய இறைவன் தன்னை அன்பினால் நினைந்துருகும் அடியார்களை இவ்வுலகில் உடம்பொடு நிலவச் செய்வதன் நோக்கம், காண்டற்கரிய கடவுளாகிய தன்னை அன்பு நிறைந்த அடியார்வடிவில் உலகத்தார் கண்டு நெஞ்சம் உருகி வினைத்தொடர்பறுத்து உய்தற் பொருட்டே என்பார்,

"நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்" (6-14-1}

என அருளிச் செய்தார் திருநாவுக்கரசர். எனவே தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும், தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல் அன்பு நீர்பொழி கண்ணும் உடைய தவப்பெருஞ் செல்வராகிய சிவஞானிகள், மெய்ப்பொரு ளுணர்ந்து நையாத மனத்தினராகிய உலகத்தாரைத் தமது சிவாநுபவத்தால் செம்பொருளுண்மை தெளிந்து நைந்துருகும் உள்ளத்தினராகத் திருத்திப் பணி கொள்ளுதலால் இத்தகைய சிவபரம்பொருளின் உண்மைக்கும் அம்மெய்ப்பொருளுணர்வாற் பெறும் பேரின்ப நிலைக்கும் சாட்சியாக விளங்குகின்றார்கள் என்பார், ‘ஓவாத்தவமிக்காரே இதற்குச் சான்று’ என்றார்.