பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

35


“பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த்
     தன்மை யளித்தா னெனப்பொலிந்து
மருவு மகிழ்ச்சி யெய்தஅவர்
     மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தான்
      என்று மிகவும் அகமலர
இருவர் மனமும் பேருவகை
      எய்தி யரிய வினை செய்தார்’’

(பெரிய. சிறுத்தொண்டர் புராணம் செய். 64)

எனவரும் பாடல் அவ்விருவரும் தம்பிள்ளையை யரிந்து கறியாக்கி அடியாரை உண்பிக்குத் திறங்கொண்ட மனமகிழ்ச்சியினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.


19. பாதக மென்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும்-சேதிப்பக்
கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
சண்டீசர் தன்செயலாற் றான்
.

இதுவும் அது.

(இ-ள்) சிவபூசனையில் ஈடுபட்டிருந்த சண்டீசப்பிள்ளையார் (சிவபூசைக்குரிய பாற்குடத்தைத் தனது காலாற் சிதைத்த எச்சதத்தனைக் கொல்லுதல்) ஐம்பெரும் பாதகங்களுள் ஒன்றான கொலை யென்றும் அதனைச்செய்தல் பழியுடைய செய்கையாம் என்றும் சிறிதும் எண்ணிப் பாராமல் தன்னைப் பெற்றுவளர்த்த தந்தையும் தனக்கு மறைஓதுவித்த வேதியனும் குருவும் ஆகிய அவனுடைய இரண்டு கால்களையும் வெட்டி வீழ்த்திடக் கண்டு இறைவர் சண்டீசநாயனாரது வல்வினையின் திறத்தால் சிவமாந்தன்மைப் பெரும்பதத்தினை அவர்க்கு வழங்கியருளினார் என்னும் மெய்ம்மை நிகழ்ச்சியினை (மாணவனாகிய நீ திருத்தொண்டர் வரலாறுகளிற்) கண்டுணர்ந்தனை யல்லவா? எ-று.

பாதகம் என்பன கொலை முதலிய கொடும் பாவங்கள். பழியாவது அத்தீவினைகளைச் செய்தோரைக் குறித்து உலகத்தாராற் கூறபபடும் இகழ்ச்சியுரை. சண்டீசப் பிள்ளையார் சிவபூசனைக்கிடர் செய்த எச்ச தத்தன் என்னும் தன்தந்தையின் கால்களை வெட்டி வீழ்த்திய ஒரு செயல், பிறப்பால் வேதியனைக் கொன்றதும் உறவால் தந்தையைக் கொன்றதும் உணர்வாற் குருவைக் கொன்றதும் ஆகிய முத்திறக் கொலைப்பாவங்கட்கும் அவைபற்றிய பழிப்புரைகட்கும் இடனாகிய செயல் என்பதனைத் தெரிந்த நிலையிலும் அதனைப்பொருட்படுத்தாமல்