பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


‘சிவகருமஞ் சிதைத்தானைக் கோறல் தீதில்லை’ என்ற துணிவுடன் நிகழ்த்திய அருஞ் செயலாம் என்பார், ‘பாதகம் என்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைச் சேதிப்ப’ என்றார். சேதித்தல்-வெட்டி வீழ்த்தல். எச்சதத்தனுடைய கால்கள் இரண்டினுள் சிவ பூசனைக்குரிய பாற்குடத்தை உதைத்துச் சிதைத்தது ஒரு காலேயாயினும் அக்காலுக்கு உறுதுணையாய் நிலத்தில் ஊன்றி நின்றது மற்றொரு கால் ஆதலின், சிவபெருமான் பூசனைக்குத் தீங்கு செய்ததும் அதற்கு உறுதுணையாய் நின்றதுமாகிய இரு தாள்களும் தண்டனைக் குரியனவே என்னும் முறைமையில் எச்சதத்தனுடைய இரண்டு கால்களையும் ஒருங்கே வெட்டி வீழ்த்தினர் என்பார், ‘தாள் இரண்டுஞ் சேதிப்ப’ என்றார். இங்ஙனம் சண்டீசப்பிள்ளையார் இறைவன்பாற் கொண்ட பேரன்பினால் சுற்றத் தொடர்பறச் செய்த அரிய செயலைக் கண்டு சிவபெருமான் பத்திமுதிர்ந்த பாலகனாராகிய அவரைத் தம் மைந்தர் என அருளால் எடுத்து அணைத்து ‘நம்பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்; இனி உனக்கு அடுத்ததாதை நாம்; சண்டீசனு மாம் பதந்தந்தோம்’ எனச் சிவமாந்தன்மைப் பெரும்பதத்தை வழங்கியருளிய திறம்புலப்பட, ‘தாதையைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசர் கண்டு சண்டீசர் தன்செயலால் தாமாம்பரிசு அளித்தார்’ என்றார். கண்டாயே- (இச்செய்தியினைத் திருத்தொண்டர் வரலாறுகளிற்) கண்டுணர்ந்தனையல்லவா? கண்டாயே என்புழி ஏகாரவினா தேற்றப் பொருள் தந்து நின்றது.

இத்திருக்களிற்றுப் படியார்,

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளாற் றேவர் தொழப்
பாதகமே சோறு பற்றியவா தோணோக்கம்’

எனவரும் திருவாசகப்பனுவலை யடியொற்றியமைந்துள்ளமை ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும்.


20. செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை
ஐய இதுவமுது செய்கென்று-பையவிருந்
தூட்டி யறுத்தவர்க்கே யூட்டி யறுத்தவரை
நாட்டியுரை செய்வதென்னே நாம்.

இதுவும் அது.

(இ-ள்) தாம் பசியால் களைப்புற்று இடறி வீழ்ந்த நிலையில் வயல் வெடிப்பிற் சிதறிய ‘செந்நெலரிசி, கீரை, மாவடு என்னும் படிக் கட்டளையாகிய இதனை ஐயனேதிருவமுது செய்தருள்க’ என்று வேண்டி மெல்ல அமர்ந்திருந்து தம்முடைய குரல்வளையாகிய மிடற்றுத் தண்டினை அரிவாள் கொண்டு அறுத்து, (வயல்வெடிப்பிற்