பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும்.

“ஆன்மா சிவனுக்கு உடைமையாதலை அஞ்செழுத்தை உச்சரிக்கும் முறையில் வைத்து நோக்கித் தன்னுடம்பினுள்ளே உந்தி, இதயம், புருவ நடு என்னும் மூன்றனையும் முறையே பூசைத்தானம், வேள்வித்தானம், தியானத்தானமாகக் கருதிக் கொண்டு, புறம்பே ஞானபூசை செய்யும் முறைப்படி இதயத்தாமரையில் திருவைந்தெழுத்தாகிய திருமேனியில் அம்முதல்வனையமைத்துக் கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எண்மலர்களைச் சாத்தித் திருவைந்தெழுத்தால் அருச்சனை செய்து, ஐந்தெழுத்தாகிய மந்திரத்தாலே உந்தியில் ஒமஞ்செய்து ஞான அனலை எழுப்பி அதன்கண் விந்துத் தானத்து அமிழ்தமாகிய நெய்யினைச் சுழுமுனைநாடி, இடைநாடியாகிய சுருக்கு சுருவங்களால் ஓமித்து விந்துத்தானமாகிய புருவநடுவிலே சிகர யகர வகரங்கள் மூன்றும் முறையே பரம்பொருளாகிய அது, (தத்) தியானிப்போனாகிய நீ, (துவம்) அருளால் ஆகின்றாய் (அசி) என்னும் மகாவாக்கியப் பொருளாகும் முறைமை நோக்கி, அதனாற் சிவோகம் (சிவமேநான்) எனப் பாவிப்பானாயின், அப்பாவனைக்கண் அம்முதல்வனகிய சிவன் விளங்கித் தோன்றுவான்; அங்ஙனம் தியானிக்கும் ஆன்மா அப்பரப் பொருளுக்கு அடிமையாவன்” என்பது இவ்வெண்பாவினால் உணர்த் தப்பெறும் பொருளாகும்.

இனி, இத்திருக்களிற்றுப்படியார் பாடலில் அஞ்செழுத்து என்றது, திருவைந்தெழுத்தின் நுண்ணிய நிலையாகிய ஓங்காரமாகிய பிரணவத்தைக் குறிக்குமெனக் கொண்டு தில்லைச்சிற்றம்பலவர் பின் வருமாறு உரை வரைந்துள்ளார்.

“அகாரம் உகாரம் மகாரம் விந்து நாதம் என்கிற பஞ்சாக்கரமான பிரணவத்துக்குப் பிரமா விஷ்ணு உருத்திரர் மகேசுரர் சதாசிவர் இவர்கள் அதிதேவதைகளுமாய், ஒங்காரமாயே நின்று நடத்துகின்ற இந்த ஐந்தெழுத்தே சத்தியையுடைய சிவன் திருமேனி கொண்டு நடத்துகின்ற முறைமையைக் காட்டுதலால் இந்த ஐந்தெழுத்தும் மூலாதாரத்திலே அகரமும் பிரமாவும், நாபிக்கமலத்திலே உகாரமும் விஷ்ணுவும், இருதயகமலத்திலே மகாரமும் உருத்திரனும், கண்டத்திலே விந்துவும் மகேசுவரனும், புருவமத்தியிலே நாதமும் சதாசிவமும் இப்படிச் சுழுமுனைவழியாக நிற்கின்ற முறைமையைக் குரு உபதேசத்தாலே பெற்று, இந்த ஐந்தெழுத்தையும் மூலாதாரத்திலே, பிரமரந்திரத்திலே செல்ல உச்சரித்தால், இந்தப் பிரணவ