பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

49


உருவறச் சிதைதல்; ஈண்டு புலப்படாது மறைதல் என்ற குறிப்பில் ஆளப்பெற்றது. ஆறாதாரங்களில் வைத்துக் காணும் அறிவுமுயற்சியை விட்டு அவனருளாலே அம்முதல்வனைக்கண்டு ஒன்றுபடும் யோகமே நிராதாரயோகமாம் என்றவாறு.

இத்திருவுந்தியார்க்குரிய உரை விளக்கமாக அமைந்தன. பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடல்கள்.

26. ஆக்கப் படாத பொருளா யனைத்தினிலுந்
தாக்கித்தா னொன்றோடுந் தாக்காதே- நீக்கியுட
னிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதார மாம்.

இது நிராதார யோகத்தின் இயல்பினை விரித்து விளக்குகின்றது.

(இ-ள்) ஆன்மபோதத்தாற் கற்பனை செய்ய வொண்ணாத அரும் பொருளாய் எல்லாப் பொருள்களிலும் தான் கூடி நிற்கும் போதே அவையொன்றிலுந் தோயாமல் உயிர்கட்குளவாந் துயரங்களை யறிந்து நீக்கி உடனிருந்து உதவும் பரம்பொருளுடனே பிரியாது நிலைத்துள்ள திருவருளோடு ஒன்றிநிற்றல் நிராதார யோகமாம் எ~று.

ஆக்குதல்-கற்பனையால் இன்னவுரு எனக் கற்பித்துக் கொள்ளுதல். இன்னவுரு இன்ன நிறமுடைய பரம்பொருள் என ஒருவராலும் கற்பிக்கவொண்ணாத நிலையிற் கற்பனை கடந்த சோதியாகத் திகழ்வது சிவபரம்பொருள் என்பதுணர்த்துவார் ‘ஆக்கப்படாத பொருள்’ என்றார். நீக்குதல் - உயிர்களின் துன்பங்களைப் போக்குதல். உடன் நிற்கும் பொருள் என்றது, உயிர்க்குயிரா யுடனிற்கும் முழுமுதற் பொருளை. உடனிற்கும் பொருளுடனே நிற்கும் பொருள் என்றது, தீயின் வெம்மையும் நீரின் தண்மையும் போன்று சிவபரம்பொருளோடு பிரிவின்றியுடனாய் நிற்கும் திருவருட்சத்தியை, அதனோடு உடனாய் நிற்கையாவது, அத்திருவருளே கண்ணாகக்கொண்டு முழுமுதற்பொருளைக் கண்டு கூடுதல்.


27. காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக்-காண்கின்றார்
காண்பானுங் காணப் படுபொருளு மின்றியே
காண்கையினாற் கண்டனரே காண்.

இதுவும் அது.

7