பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


‘பற்றற்றார்சேர் பழம்பதியை’ (4-15-1) என ஆளுடையவரசரும் அறிவுறுத்தியருளியமை இங்கு நினைத்தற்குரியதாகும்.


௧௯. கருதுவ தன்முனங் கருத்தழியப் பாயும்
ஒருமகள் கேள்வனென் றுந்தீபற
உன்ன அரியனென் றுந்தீபற.


இஃது இவ்வாறு திருவருளோடு இடையீடின்றி ஒத்தொழுகுவார்க்குச் சிவம் விரைந்து வெளிப்பட்டொளிரும் என அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) ஒப்பில்லாத திருவருளாகிய சத்திக்கு நாயகனாகிய சிவபெருமான், ஆன்மாவாகிய இவன் கருதிய அப்பொழுதே இவனுடைய சுட்டுணர்வாகிய கருத்தினையும் ஒழித்துத் தானுந் தன் கருத்துமாய் விரைந்து இவனைக்கூடி நிற்பன். இவ்வாறன்றி ஆன்ம போதத்தால் எக்காலமும் நினைந்து கூடுதற்கு அரியவன் அம்முதல்வன் என்றுணர்வாயாக. எ-று.

ஈண்டுக் கருதுதல் என்றது, திருவருளே சார்பாகக் கொண்டு இறைவனைத் தியானித்தலை. குகையில் உருக்கின செம்பிலே குளிகை பாய்ந்த அளவில், செம்பு தன்னை அநாதியே பற்றிய களிம்பு நீங்கிப் பொன்னும் ஒளியுமாய் நின்றாற் போல, இவ்வான்மா தற்போதம் கெடத் திருவருள்வழிநின்று சிவனைத் தியானித்த அப்பொழுதே சிவன் இவனுடைய கருத்தையும் ஒழித்துத் தானும் தன்னுடைய கருத்துமாய் இவனைத் தன்னகத்தடக்கிக் கொண்டு இவனே தானாய்ப் (பிரிவின்றி) விளங்கித் தோன்றுவன் என்பார், ‘கருதுவதன்முனம் கருத்தழியப்பாயும் ஒருமகள் கேள்வன்’என்றார். ஒருமகள் என்றது, கதிரவனும் ஒளியும் போல இறைவனைப் பிரிவின்றியுள்ள ஒப்பற்ற திருவருளாகிய சத்தியினை. கேள்வன்-நாயகன். உன்ன அரியன். யாவராலும் தம் அறிவினால் நினைதற்கு எட்டாத நிலையில் சிந்தனைக்கரிய சிவமாய்த் திகழ்பவன்,

இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைப்பது பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும்.


35. “அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்குஞ்-சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒருமகள்தன் கேள்வன் உனக்கு.”