பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

::சேவக நிரம்பு திருவீதி புலியூரிற்

செய்த பெருமான்
(குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் 9-7)

எனவரும் தொடரிற் பாராட்டிப் போற்றியுள்ளமை காணலாம்.

தில்லைத் திருக்கோயிலிற் சிவகங்கைத் தீர்த்தத்திற்கு மேற்பக்கத்தேயுள்ள நூற்றுக்கால் மண்டபம் விக்கிரம சோழன் பணித்த வண்ணம் அவனுடைய படைத் தலைவனாகிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவனாற் கட்டப்பெற்றதாகும். இம்மண்டபத்தில் பன்னிரண்டு தூண்களில் ‘விக்கிரமசோழன் திரு மண்டபம்' எனப்பெயர்பொறிக்கப் பெற்றிருத்தலால் இம்மண்டபம் விக்கிரம சோழன் பெயரால் அவனது படைத்தலைவன் காலிங்கராயனாற் கட்டப் பெற்றதெனத் தெரிகிறது. இம்மண்டபத்தைக் கட்டியவன் அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பது

"மல்லற் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தைத்
தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்லம்
அழிவுகண்டான் சேரன் அளப்பரிய வாற்றற்
கிழிவு கண்டான் தொண்டைபா ரேறு” -

(தெ. இ. க. தொ . IV பக். 33)

எனவரும் சிதம்பரம் கல்வெட்டுச் செய்யுளால் அறியப்படும்.

தில்லையம்பலவாணர் மாசிமக நாளில் கிள்ளையிலுள்ள கடல் துறையில் தீர்த்தமாடி வீற்றிருந்தருளுதற்கு மண்டபமும், தில்லையிலிருந்து கிள்ளைக் கடற்கரைக்குச் செல்லுதற்குரிய பெருவழியும் விக்கிரம சோழன் ஆட்சியில் அவ்வேந்தனது ஆணை எங்கும் நிகழ அவன் படைத்தலைவனாகிய காலிங்கராயனால் அமைக்கப் பெற்றன. இச்செய்தி,

“மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்
பேசற்ற அற்றைப் பெருவழியும் - ஈசற்குத்
தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும் மன்புலியாணை நடக்க வந்து"

(தெ. இ. க. தொ IV. பக், 34)

எனவரும் வெண்பாவால் இனிது புலனாதல் காணலாம்.