பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கால் மண்டபம் கட்டும் வழக்கம் இவன் காலத்தில், தான் தோன்றியிருத்தல் வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர். திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம் தேவாசிரியன் என வழங்கப்பெறுகின்றது. இம் மண்டபம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்பது, திரிபுவன வீரேச்சுரத்திலுள்ள வடமொழிக்கல்வெட்டால் அறியப்படும். இவ்வேந்தனது படைத் தலைவனாகிய கண்டர் சூரியன் சம்புவராயன் என்பான் திருவக்கரையிலுள்ள சிவன் கோயிலில் சூரியன் திருக்கோபுரமும் கண்டர் சூரியன் என்ற ஆயிரக்கால் மண்டபமும் ஆகியவற்றைக் கட்டியுள்ளான். எனவே தில்லையிலுள்ள ஆயிரக்கால் மண்டபமும் இவ்வேந்தன் காலத்திலேயே கட்டப்பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாயிரக்கால் மண்டபத்திலேயே சேக்கிழார் நாயனார் தாம்பாடிய திருத்தொண்டர் புராணத்திற்கு உரை விரித்தருளினார் என்பது உமாபதி சிவாசாரியார் இயற்றிய சேக்கிழார் புராணத்தால் அறியப்படும்.

2. பாண்டியர்

கி.பி. 1251-71 முடிசூடிய முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் பலநாடுகளை வென்றமையால் மகாரா சாதி ராசபரமேசுவரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன் எல்லாந் தலையான பெருமாள் எனப் பல பட்டங்களைப் புனைந்து கொண்டான். இல்வேந்தர் பெருமான் சைவர்களால் கோயில் எனப் போற்றப்பெறும் தில்லைப் பெருங் கோயிலுக்கும், வைணவர்களால் கோயில் எனப்போற்றப்பெறும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கும் பலதிருப்பணிகளைப் புரிந்துள்ளான். இவன் தில்லையிற் கூத்தப்பெருமானை வணங்கிப் பல துலாபாரதானங்கள் செய்தான். தில்லையம்பலத்தைப் பொன் வேய்ந்தான். தில்லைத் திருக் கோயிலின் மேலைக் கோபுரம் 'சுந்தர பாண்டியன் திருநிலை எழுகோபுரம்' என்னும் பெயரால் (தெ. இ. சு. தொகுதி 4-6.24} கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே இக்கோபுரத்தைப் பழுது பார்த்துப் பதுக்கியவன் இப்பாண்டிய மன்னன் என்பது நன்கு புலனாகும். இவன் தான் துலாபாரம் புக்க பொன்னைக் கொண்டு, தில்லைக் கோயிலுக்குப் பொன் வேய்ந்துள்ளான்.