பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

"திங்கள் அரவமுஞ் செழுமலர்த் தாருடன்
பொங்குபுனற் செஞ்சடையோன் பொற்புலியூர் வீற்றிருந்து
காடவன் திறையிடக் கண்டினிதிருந்து
வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணியருளிய"

ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு '(புதுக்கோட்டைக் கல்வெட்டுத் தொகுதி 370-372)' என வரும் இவனது மெய்க் கீர்த்தித் தொடரால் இனிது புலனாகும்.

3. பல்லவர்

சிம்மவர்மன் முதலிய முற்காலப் பல்லவர்களின் கல்வெட்டுக்கள் தில்லையிற் கிடைக்கவில்லை. சோழமன்னர்களுக்குப் படைத்தலைவர்களாயிருந்து பின்னர்த் தனியரசு நடத்திய பிற்காலப் பல்லவர்களின் திருப்பணிகளே இக்கோயிற் கல்வெட்டுக்களில் காணப்பெறுகின்றன.

காடவராய மன்னர்களில் மிகவும் சிறப்புடன் விளங்கியவர்கள் சாடும் பெருமானான முதலாவது கோப்பெருஞ்சிங்கனும் அவன் மகன் வாள்வல்ல பெருமாளான இரண்டாவது கோப் பெருஞ்சிங்கனும் ஆவர். இருவரும் சகலபுவனச் சக்கரவர்த்தி, அவனியாளப் பிறந்தான் என்ற பட்டங்களைப் பெற்றிருந்தனர். முதலாவது கோப்பெருஞ்சிங்கன் சோழர் குல இளவரசியைத் திருமணம் புரிந்தவன். அதனால் மணவாளப் பெருமாள் எனப் போற்றப் பெற்றான்.

முதலாவது கோப்பெருஞ்சிங்கன் தன் ஆட்சியின் மூன்றாவது, நான்காவது ஆண்டுகளில் தில்லைக் கோயிலின் பால் நெய் தேவைகளுக்காக ஆயிரத்து எண்பத்தாறு பசுக்களை ரிஷப, சூல முத்திரையுடன் அளித்தான் (S.TIV.ol VII.No 54}. இது இவன் மகனின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1237-இல் இவன் தில்லைக் கோயிலின் தெற்குக் கோபுரம் கட்டுவதற்காகத் தொண்டை மண்டலத்து ஆற்றூரில் முந்தாற்று ஒன்றே முக்கால் வேலி நில வருவாயையும் பிறவரிகள் சிலவற்றிலிருந்து கிடைக்கும் பொருளையும், அளித்துள்ளான். (S. I. I, Vol No. 51). இச்செய்தியைத்