பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

சிற்பங்களிற் பல சிதைவுற்றன. வீணை, யாழ் முதலிய நரம்புக கருவிகள் விரலால் மீட்டி வாசித்தற்குரியன என்பதனைப் பலரும் அறிவர். சிவகாமியம்மை கோயிலிற் காணப்படும் நரம்புக் கருவி ஒன்று இக்காலத்தில் வழங்கும் மேலைநாட்டு இசைக் கருவியான பிடிலைப் போன்று, வில்லினால் வாசித்தற்குரிய கருவியாக அமைந்துள்ளமை காணலாம். இக்கருவியின் முழு அமைப்பினையும் நாம் காண முடியாதபடி கலகக்காரர்களால், இது சிதைவுற்றுக் காணப்படுகின்றது.

தில்லைக்கோயிலில் குதிரை பூட்டிய தேர்மண்டபமாக நிருத்த சபையும், யானையும் யாளியும் இழுக்கும் தேர் அமைப்பாகப் பாண்டிய நாயகம் திருக்கோயிலும் அமைந்துள்ளமை பழங்காலக் கட்டடக் கலையின் சிறப்பினை விளக்குவதாகும். இவ்விருமண்டபங்களில் உள்ள தூண்கள் யாவும், முழுவதும் தெய்வத் திருவுருவினைத் தன்னகத்தே கொண்ட சிறு சிறு தேர்களைப் பெற்றனவாக விளங்குதல் அக்காலச் சிற்பிகளின் நுண்ணிய வேலைப்பாட்டுத் திறமைக்கு, ஒர் எடுத்துக்காட்டாகும்.

தில்லைப் பெருங்கோயில், நெடுந்துாரத்திலேயே ஒளியுடன் திகழும் செம்பொன் மாளிகையாகிய பொன்னம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு அழகிய சிற்பங்கள் பலவற்றையுடைய தாய் அமைந்திருந்தது என்பதனையும், அதன் நடுவே மாணிக்கக் கூத்தன ஆடல் புரிந்தருளும் தில்லைச் சிற்றம்பலமாகிய திருமன்றம் அழகிய சிறந்த ஒவியங்கள் பல எழுதப்பெற்றுக் கவினுறத்திகழ்ந்தது என்பதனையும் “சிற்பந்திகழ்தரு திண்மதிற்றில்லை” (திருக்கோவையார்.315) எனவும், “சேணிற்பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன்” (திருக்கோவையார் 23) எனவும், 'சிற்றம்பலத்து எழுதும் ஒவியங்கண்டன்ன ஒண்ணுதலாள்'(திருக்-384) எனவும் வரும் தொடர்களில் மணிவாசகப் பெருமான் குறித்துப் போற்றியுள்ளமை, அவர் காலத்திலேயே தில்லைச் சிற்றம்பலம் சிற்பம் ஒவியம் முதலிய கலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்த செய்தியைப் புலப்படுத்துவதாகும்.

தில்லைத் திருச்சிற்றம்பலத் திருக்கோயிலில் வழிபாட்டுக் காலங்களில் நாள்தோறும் குடமுழா முழக்கப்பெற்றது.