பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

லில் சைவரும் வைணவர்களும் அன்பினால் ஒன்றுகூடி நடராசர் கோவிந்தராசர் ஆகிய இருபெருந்தெய்வங்களையும் வழிபட்டு மகிழ்தற்குரிய அமைதியான சூழ்நிலை தொடர்ந்து நிலைபெற்றுள்ளது என்பதனை இத்திருக்கோயிலுக்கு வரும் அன்பர்கள் எல்லோரும் நன்குணர்வர். இத்தகைய அமைதிநிலையே என்றும் நின்று நிலவி இன்பம் அளிப்பதாகுக.

2. தில்லையில் ஆடல்புரியும் கூத்தப்பெருமான் திருவுருவம் இடம்பெயர்ந்து மீண்டு எழுந்தருளினமை.

தில்லைச் சிற்றம்பலத்தில் சிவகாமியம்மை காணத் திருநடம் புரிந்தருளும் கூத்தப்பெருமானது திருவுருவம் கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம்பரத்தினின்றும் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. புறச்சமயத்தவரால் நடராசப்பெருமான் திருவுரு சிதைக்கப்பெற்றுவிடும் நிலையேற்படுமோ என அஞ்சிய தில்லைவாழந்தணர்கள், அம் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து அயலவர் அறியாதவாறு சிதம்பரத்தினின்றும் எடுத்துச் சென்றனர். எதிர்ப்பட்ட சிற்றூரொன்றின் புறத்தே மக்கள் நடமாட்டமில்லாத புளியந் தோப்பினை நள்ளிரவில் அடைந்தனர். அத்தோப்பிலுள்ள பெரிய புளியமரம் ஒன்று பெரிய பொந்தினையுடையதாகத் தென்பட்டது. அப்பொந்தினுள்ளே நடராசமூர்த்தியை ஒருவரும் அறியாதபடி பாதுகாப்பாக வைத்து மூடிவிட்டுத் திரும்பினர். சிலநாள் கழித்து அப்புளியந் தோப்புக்குச் சொந்தக்காரராகிய வேளாளர் ஒருவர் தமக்குச் சொந்தமான புளியமரத்தின் பெரும்பொந்து அடைக்கப்பட்டிருத்தல் கண்டு அதனை வெட்டிப்பார்த்தார். அதன் கண் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்றிருத்தலைக் கண்டார். அவ்வாறு மறைக்கப்பட்ட சூழ்நிலையை யுணர்ந்து ஒருவரும் அறியாதவாறு அப்பொந்தினை நன்றாக மூடிவிட்டார். அம்மரத்தில் தெய்வமிருத்தலைத் தாம் கனவுகண்டதாக ஊர் மக்களுக்குச் சொல்லி இம்மரத்திற்குப் பூசை செய்துவந்தார்.

புறச்சமயத்தார் படையெடுப்பினால் நேர்ந்த அச்ச நிலை நீங்கிய பின் தில்லைவாழந்தணர்கள் தாம் பொந்தில் புதைத்து