பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

சோழ மண்டலத்தைச் சார்ந்த சிற்றூர் என்றே கருதவேண்டியுளது. மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிய 'அம்பலப்புளி' என்னும் கட்டுரையில் இச் செய்தி வெளியிடப்பெற்றுள்ளது. (நினைவு மஞ்சரி - இரண்டாம் பாகம் - பக்கம் 1 - 10)

ஹைதர் அலி காலத்தில் தில்லைவாழந்தணர் மலைநாட்டிற்குச் சென்று அங்குள்ள சிற்றூரில் புளியமரப் பொந்தில் நடராசப் பெருமாளை வைத்து மூடிவிட்டார்கள். சில ஆண்டுகள் கழித்துச் சென்று பார்த்துத் தாம் வைத்த இடம் தெரியாது மயங்கிய, நிலையில் அங்கு உழுது கொண்டிருந்த உழவர்கள், 'காளையை அவிழ்த்து அம்பலப்புளியருகில் கொண்டு விடு' என்ற வார்த்தையைக் கேட்டு நடராசப்பெருமான் இருக்குமிடமறிந்து எடுத்து வந்தார்கள் என்ற செய்தி செவிவழியாக வழங்கி வருகிறது. (மகாவித்துவான். ச. தண்டபாணி தேசிகர் எழுதிய சிதம்பரம் என்ற நூல் - பக்கம் 125)

தில்லைவாழந்தணர் நடராசப் பெருமானைப் புளியமரப் பொந்திற் புதைத்து வைத்திருந்த புளியங்குடி என்ற ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு அருகே 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புளியங்குடி எனவும், அவ்வூருக்கு அருகேயுள்ள ராஜபாளையத்தில் 'அம்பலப் புளிப்பஜார்' என அவ்வூர்க் கடை வீதி வழங்கப் பெறுதல் இதனைப் புலப்படுத்தும் எனவும் கூறுவாரும் உளர்.

கூத்தப் பெருமான் தில்லையிலிருந்து இடம் பெயர்ந்து மீண்டும் தில்லைக்கு எழுந்தருளிய வரலாறு குறித்து அண்மையில் தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்ட தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50 என்னும் நூலில் தெளிவான குறிப்புக்கள் கிடைத்துள்ளன. இந்நூலில் 45 முதல் 48 வரையுள்ள நான்கு செப்பேடுகளும் தில்லைக்குரிய செப்பேடுகளாகும். இவை திருவாரூர்த் தியாகராசர் கோயில் நிருவாக அலுவலகத்திலிருந்து கிடைத்தமையால் திருவாரூர்ச் செப்பேடுகள் என்ற பெயரில் 4, 5, 6, 7 எண் வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.