பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புலி பாம்பு பூதங்கள் தீ முயலகன், மந்திரங்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்க ஏவிய போது சிவபெருமான் அவற்றையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டு ஆடல் செய்யத்தொடங்கினார். அவ்வாடலைக்காணப்பெறாது அஞ்சிய முனிவர்கள், தம் பிழையினைப்பொறுத்துக் கொள்ளும்படி இறைவனைப் பணிந்து வேண்டினார். அந்நிலையில் சிவபெருமான் உமாதேவியும் திருமாலும் கண்டு மகிழ ஐந்தொழில் திருக்கூத்தாகிய ஆனந்தத் தாண்டலத்தை ஆடியருளினார் என்பதும், உலகில் மன்னுயிர்கள் அமைதியடைய ஆடிய அவ்வானந்தத் திருக்கூத்தினையே பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் வேண்டிக் கொண்டபடி, தில்லைச்சிற்றம்பலத்திலே ஆடியருளினார் என்பதும் முன்னர்க்கூறப்பெற்றன. இத்தாண்டவங்களுள் படைத்தற் றொழிலை நிகழ்த்தும் காளிகாதாண்டவம் திருநெல்வேலி தாமிர சபையிலும், காத்தற்றொழிலை நிகழ்த்தும் கவுரிதாண்டவம் திருப்புத்தூர்ச் சிற்சபையிலும், சந்தியா தாண்டவம், மதுரை வெள்ளியம் பலத்திலும் அழித்தற் தொழிலை நிகழ்த்தும் சம்கார தாண்டவம் உலகமெல்லாம் ஒடுங்கிய ஊழிக்காலமாகிய நள்ளிரவிலும், மறைத்தற்றொழிலை நிகழ்த்தும் திரிபுர தாண்டவம் திருக்குற்றாலச் சித்திரசபையிலும், அருளல் தொழிலை திகழ்த்தும் ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும், மேற்கூறிய ஐந்தொழில்களையும் ஒருங்கே நிகழ்த்தும் ஆனந்தத் தாண்டவம் தில்லைச்சிற்றம்பலத்திலும் நிகழும் எனத் திருப்புத்தூர்ப் புராணம் கூறும்.

தில்லையில் கூத்தப்பெருமானை வழிபாடு செய்யும் மூவாயிரவராகிய தில்லைவாழந்தணர் என்னும் தொகையடியார்களைப்பற்றிய வரலாறு கூறுவது பெரியபுராணத்திலுள்ள தில்லைவாழந்தணர் புராணமாகும். இப்புராணத் தொடக்கத்திலே அமைந்த முதலிரண்டு பாடல்கள் தில்லைச்சிற்றம்பலத்தைப் போற்றிப் பரவுவன.

ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச்
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.