பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37



4. திருக்கோயில் அமைப்பு

தில்லை நகரத்தின் நடு நாயகமாகத் திகழும் தில்லைச் சிற்றம்பலவர் திருக்கோயில் ஏறக்குறைய நாற்பத்து மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எழுநிலைக் கோபுரங்கள் நான்கினையும் அதன் புறத்தே அமைந்த நந்தவனப் பரப்பையும் உள்ளடக்கிய நிலையில் வெளிப் புறத்தே பெரு மதில் சூழப் பெற்றுள்ளது. கோயிற்புறமதிலாகிய இது, வீரப்ப நாயக்கர் மதிலென வழங்கப் பெறுகின்றது. எனவே இது மதுரையை ஆண்ட வீரப்ப நாயக்கர் என்பவரால் பழுது பார்த்துத் திருப்பணி செய்யப் பெற்றதெனத் தெரிய வருகின்றது. இம்மதிலின் நாற்புறமும் எழுநிலைக் கோபுரங்களுக் கெதிரே நுழைவாயில்கள் அமைந்துள்ளன. இவ்வாயில்களின் வழியே கோயிலினுள் சென்றால் எழுநிலைக் கோபுரங்களைத் தொடர்ந்து அமைந்த பெருமதில்கள், கோயிலின் உட்புறத்தே திருமாளிகைப் பத்தியினை உடையனவாய் விளங்குதல் காணலாம். எழுநிலைக் கோபுரங்களின் உட்புறத்தே அமைந்த மூன்றாம் பிரகாரம் இராஜாக்கள் தம்பிரான் திருவீதி என்னும் பெயருடையது. இராஜாக்கள் தம்பிரான் என்பது மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய சிறப்புப் பெயராகும் (Incrsiption 80 of 1928). ஆகவே இப்பிரகாரத்திலமைந்த திருமாளிகைப்பத்தி இவ்வேந்தனால் திருப்பணி செய்யப்பெற்றதெனக் கொள்ளுதல் பொருந்தும். கிழக்குக் கோபுரத்தின் வழியாகக் கோயிலினுள்ளே நுழைவதற்கு முன் அக்கோபுரவாசலின் வெளிப்புறத்தே கோபுரத்தை ஒட்டிய நிலையில் தென் பக்கத்தே விநாயகர் கோயிலும் வடபக்கத்தே சுப்பிரமணியர் கோயிலும் அமைந்துள்ளமை காணலாம். கிழக்குக் கோபுர வாசலின் தென் பறத்தே இக் கோபுரத்தைப் பழுது பார்த்துத் திருப்பணிசெய்த காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார், அவர் தமக்கையார் உருவச் சிலைகள் மாடங்களில் அமைந்துள்ளன.

சோழராட்சியில் கட்டப்பெற்ற இக்கோபுர வாயிலில் பரத சாத்திரத்திற் கூறிய வண்ணம் நூற்றெட்டுக் கரணங்களைச் செய்யும் ஆடல் மகளிருடைய சிற்ப வடிவங்களை அமைத்து அழகுப்படுத்தியவன் பல்லவ மரபினனாகிய இரண்டாம் கோப்