பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பெருஞ்சிங்கனாவான். இவனது படிவம் இக்கோபுரவாயிலுள் வட மேற்குப் பக்கத்தே தெற்கு நோக்கிய மாடத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கோபுர வாயிலுள் நுழைந்து மூன்றாம் பிரகாரத்தை அடையும் நிலையில் தோன்றும் நந்தி மண்டபம் திருமூலட்டானப் பெருமான் சந்நிதியை நோக்கிப் புறத்தே அமைக்கப் பெற்றதாகும். இப்பிரகாரத்தினை வலம் வரும் பொழுது கிழக்குக் கோபுரத்தின் எதிரே தென்பக்கமாகச் சிறிது தள்ளிய நிலையில் தில்லைப் பெருங்கோயிலின் உள் வாசல் அமைந்துள்ளமை காணலாம். கிழக்கிலிருந்து வலமாகச் சென்றால் தெற்குக் கோபுரத்தின் எதிர்ப்பக்கத்தே கதையாலியன்ற நந்தியம் பெருமான் அமைந்துள்ள கல் மண்டபமும் இதன் பின் புறத்தே பலிபீடமும் இணைந்துள்ளமை காணலாம். வெளிப்புறத்தேயுள்ள இந்நந்தி உள்ளேயுள்ள நடராசப் பெருமான் சந்நிதியை நோக்கிய நிலையில் அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாம். நந்தி மண்டபத்தின் தென்புறத்தேயுள்ள தெற்குக் கோபுரம் சொக்கசீயன் என்னும் சிறப்புப் பெயருடைய முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் திருப்பணி செய்யப் பெற்றமையின் சொக்க சீயன் என்னும் பெயர் பெறுவதாயிற்று. மூன்றாம் குலோத்துங்கனுக்குப் படைத்தலைவனாகவும் அவன் மகளை மணந்த மணவாளப் பெருமாளாகவும் விளங்கிய பல்லவர் தலைவனாகிய கோப்பெருஞ்சிங்கன் இக்கோபுரத்தை ஆண்டுதோறும் பழுதுபார்த்தற்கெனவே செங்கற்பட்டு மாவட்டம் ஆத்தார் என்றும் சிற்றாரைத் தானமாகக்கொடுத்துள்ளான். இக்கோபுர வாயிலின் உட்புறத்தே பரத நாட்டிய கரணங்களை புலப்படுத்தும் மகளிரது ஆடற்சிற்பங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இக் கோபுர வாயிலின் மேற்பகுதியில் உட்புறத்தே வடக்கு நோக்கிய நிலையில் முருகப் பெருமானது திருவுருவம் கோபுரத்தையொட்டி அடைந்துள்ளது. தெற்குப் பிரகாரத்தின் மேற்குப் பாதியில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக முக்குறுணி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. தென்பாலுகந்தாடும் தில்லன் சிற்றம்பலவனை வழிபாடு செய்தற் பொருட்டுத் தெற்குக் கோபுர வழியே நுழைந்து வலம் வரும் பொழுது முகப்பில் இப்பிள்ளையார் கோயில் அமைந்திருப்பதால் இங்கு எழுந்தருளிய விநாயகப் பெருமான் முகக்