பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

தொன்மைத் திருக்கோயிலைக் காணலாம். அங்குப் புலிக்கால் முனிவரால் பூசிக்கப்பெற்ற சிவலிங்கப்பெருமான் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தெற்குநோக்கிய நிலையில் உமைய பார்வதி அம்மையார் எழுந்தருளியுள்ளார். இவ்விரு சந்நிதிகளையும் வழிபட்டு மீண்டும் மேற்குநோக்கித் திருமூலட்டானரை வலமாக வரும்பொழுது விமானத்தின் தென்புறத்தில் வல்லப கணபதியையும் மோகன கணபதியையும், ஆலமர் செல்வராகிய தட்சணாமூர்த்தியையும் கண்டு வழிபடலாம். அங்கிருந்து வடக்குப் பக்கமாகத் திரும்பி, திருமூலட்டான விமானத்தை வலம்வரும் நிலையில் மேற்குப்பக்கத்தே மூத்த பிள்ளையார், தலவிருட்சம், சிவலிங்கம் முதலிய திருவுருவங்கள் அமைந்துள்ளமை புலனாகும். வடக்குப்பக்கத்தே திருத் தொண்டத்தொகையாற் போற்றப்பெற்ற தனியடியார் தொகையடியார் திருவுருவங்களும், அவர்களது வரலாற்றை வகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பியின் திருவுருவமும், தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் நாயனார் திருவுருவமும் அமைந்த சந்நிதியைக்கண்டு வழிபடலாம். திருமூலட்டானேசுவர விமானத்தின் வடபக்கத்தே அமைந்த சண்டீசுவரரை வணங்கி கிழக்குப்புறமாகத் திரும்பினால் சிவலிங்கத் திருவுருவில் அமைந்துள்ள அண்ணாமலையாரை வணங்கி, மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் செல்லுமிடத்துக் கீழைப்பிரகார மூலையில் அமைந்த அலங்கார மண்டபத்தைக் காணலாம். அங்கிருந்து தெற்கு நோக்கி மீண்டும் மேற்குப்பக்கமாகத் திரும்பினால் திருவுலாச் செல்லும் பஞ்சமூர்த்திகள் முதலிய எழுந்தருளும் திருமேனிகள் அமர்ந்துள்ள பேரம்பலத்தைக் கண்டு தரிசிக்கலாம். தேவசபையென வழங்கும் இப்பேரம்பலம் நடுவே செப்புத்தகடு போர்த்தப் பெற்ற கூரையினையுடையதாய்த் தென் திசை நோக்கி அமைந்த வாயிலையுடையதாய் விளங்குகின்றது. இங்கிருந்து மேற்கு நோக்கினால் கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ள பொன்னம்பலமும் அங்குச் செல்லுதற்குரிய கிழக்கு வாயிலும் அவ்வாயில் வழியே - சிற்றம்பலத்தைச் சூழவுள்ள முதற் பிரகாரத்தை அடையலாம். தில்லைப் பொன்னம்பலத்தைச் சூழத் திருமாளிகைப்பத்தியுடன் அமைந்த இம்முதற் பிரகாரம் விக்கிரம சோழன் திருமாளிகையெனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்