பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பலமாகிய பொன்னம்பலத்தில் அறுபத்து நான்கு கைச்சாத்துக்கள் உள்ளன. இவை அறுபத்து நான்கு கலைகளைக் குறிப்பன என்பர். அம்பல முகட்டில், இருபத்தோராயிரத்து அறு நூறு பொன்னோடுகள். வேயப்பெற்றுள்ளன. இவை ஒவ்வொருநாளும் மனிதர்களாகிய நம்மனோர் விடும் மூச்சின் எண்ணிக்கையை உணர்த்துவன. பொன்னோடுகளிற் பொருத்தப்பெற்ற ஆணிகள் எழுபத்தீராயிரமாகும். இவை மாந்தருடைய சுவாச இயக்கத்திற்கு ஆதாரமாகிய எழுபத்திரண்டு நாடிகளை உணர்த்துவன. இம் மன்றத்தின் புறத்தே வெள்ளித்தகடு போர்த்தப் பெற்ற பலகணிகள் தொண்ணூற்றாறும் சைவசித்தாந்தத் தத்துவங்கள் முப்பத்தாறும் அவற்றின் விளைவாகிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன. சிற்றம்பல வாயிலிலமைந்துள்ள திருக்களிற்றுப்படிகள் ஐந்தும் திருவைந் தெழுத்தை உணர்த்துவன. சிற்றம்பலத்தினுள்ளே பிரணவ தீபத்தில் சிதம்பர ரகசியம் அமைந்துள்ளது. சதாசிவபீடத்தில் கூத்தப்பெருமானும் சிவகாமியம்மையும் எழுந்தருளியுள்ளனர். நடுவேயமைந்த பீடத்திலுள்ள பத்துத் தூண்களில் நான்கு நால் வேதங்களையும் ஆறு ஆறங்கங்களையும் உணர்த்துவன. இம்மன்றத்திலுள்ள மரத் தூண்கள் இருபத்தெட்டும் இருபத்தெட்டுச் சிவாகமங்களை உணர்த்துவன. பதினெட்டுக்கற்றூண்கள் பதினெண் புராணங்களைக் குறிப்பன. மேலுள்ள ஒன்பது கலசங்கள் ஒன்பது வாயில்களைக்குறிப்பன. இம்மன்றத்தின் தத்துவ அமைப்பு,

ஆறு சாத்திரம், நாலுவேதமதில் தூண்
ஆகமங்கள் இருபத்தெட்டுடன்
ஐம்பெரும் பூதங்கள் பதினெண் புராணங்கள்
அரியசிறு தூண் உத்திரம்
ஏறுகலை அறுபத்து நாலு கைம்மா
நாட்டி எழுபத்திரண்டாயிரம்
எழில் வரிச்சுடன் ஆணி புவனம்
இருநூற்றிருபத்தி னாலும்
குலவு சிற்றோடு இருபத்தோ ராயிரமும்
கூறும் அறு நூறும் ஆகத்