பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

திருவேட்களம் திருக்கழிப்பாலை முதலிய தலங்களை வணங்கிப் 'பனைக்கை மும்மத வேழ முரித்தவன்' என்னுந் திருக்குறுந் தொகையினைப் பாடித் தில்லையை யடைந்தார். 'அரியானை அந்தணர்தஞ் சிந்தையானை' என்னும் பெரிய திருத்தாண்டகம் பாடி அம்பலவரை வணங்கிச் 'செஞ்சடைக் கற்றை முற்றத் திள நிலா வெறிக்குஞ் சென்னி' என்னும் திருநேரிசையையும், 'பாளையுடைக் கமுகோங்கி' எனனும் திருவிருத்தத்தினையும் பாடிப் போற்றினார்.

"குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமுங் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
யிந்த மாநிலத்தே"

எனவும்

"வாய்த்தது நந்தமக் கீதோர்பிறவி மதித்திடுமின்"

எனவும் வரும் திருப்பாடல்களில் தில்லையைக்கண்டு வழிபடுதலே மக்கட்பிறப்பின் மேலான பயன் எனவும் இப்பயனைப் பெறுதற்குச் சாதனமாகிய இப்பிறப்பினை மதித்துப் போற்றுதல் வேண்டும் எனவும் அப்பரடிகள் அறிவுறுத்திய திறம் நினைந்து போற்றுதற்குரியதாகும். இறைவன் கோயில் கொண்டருளிய எல்லாத் தளங்களிலும் மிகவும் பெருமை வாய்ந்தது இத்தில்லைத் தலமே என்பதனைப் "பெருமை நன்றுடைய தில்லை" (4-57-4) எனவரும் தொடரில் நாவுக்கரசர் குறித்துள்ளமை அறியத் தகுவதாகும். சிவபெருமான் பல்வேறு தலங்களிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பினும் அம் முதல்வனுடைய திருவருட்கலைகள் யாவும் ஒருங்கேபுக்கு ஒடுங்கி, நிற்கும் பொது நிலையம், இறைவன் அருட்கூத்தியற்றும் புலியூர்ச் சிற்றம்பலமே என்னும் உண்மையினை உணர்த்தும்