பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அகப்பொருட் கோவை யொன்று பாடித்தருக' எனக்கேட்டு அதனையும் எழுதிக் கொண்டு திருவாதவூரன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடையார் எழுதியது' எனத் தமது கைச்சாத்திட்டுத் தில்லையம்பலத்தில் வைத்து மறைத்தருளினார். அவ்வேட்டினைக் கண்டு வியப்புற்ற தில்லைவாழந்தணர்களும் அடியார்களும் திருவாதவூரடிகளையடைந்து அதற்குப் பொருள் விரித்தருளும்படி வேண்டினர். அடிகளார் அவர்களுடன் தில்லைப் பொன்னம்பலத்தையடைந்து 'திருவாசகத்துக்குப் பொருளாவார் தில்லை யம்பலவரே' எனச் சுட்டிக்காட்டி எல்லோரும் காணத் தில்லை யம்பலத்துட்புக்கு மறைந்தருளினார் என்பது வரலாறு. எனவே எட்டாந்திருமுறையாகிய திருவாசமும் கோவைத்திருவாசகமும் தில்லைச் சிற்றம்பலத்துடன் நெருங்கிய தொடர்புடைய பனுவல்கள் என்பது நன்கு பெறப்படும்.

திருவாசகம், சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பகுதிகளையுடையது. அவற்றுள் இருபத்து நான்கு பகுதிகள் தில்லையில் அருளிச் செய்யப்பெற்றன. திருச்சிற்றம்பலக் கோவை முழுவதும் தில்லைச் சிற்றம்பலவனைப் போற்றும் தோத்திரமாகவும், அகனைந்திணைப்பொருளை நாடகமாக விரித்துக்கூறும் அகப்பொருளிலக்கியமாகவும் அமைந்துள்ளது. முத்திநெறியாகிய பேரின்ப நிலையினையடைதற்குச் சாதனமாகிய பத்திநெறியின் இலக்கியமாகத் திகழ்வது திருவாசகம். உலகியல் வாழ்வுக்கு இன்றியமையாத ஒருவன் ஒருத்தியின் இன்ப அன்பினை வளர்க்கும் அகத்திணை யொழுகலாற்றை விரித்துக் கூறமுகமாகப் பத்தி நெறியின் பயனாகிய முத்தி நெறியின் வெற்றியினை உவமை வாயிலாக உய்த்துணர வைப்பது திருச்சிற்றம்பலக் கோவை.

தில்லைப் பொன்னம்பலத்திலே சிவபெருமான் தென் திசை நோக்கி ஆடல் பரிந்தருளும் திறத்தினைத்' தென்பாலுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்' எனவும், 'தென்மாத்திசை வசை தீர் தரத்தில்லைச் சிற்றம்பலத்துள் என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறை' எனவும் வரும் தொடர்களாலும், பதஞ்சலி