பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

சோழமன்னனுக்கு அமைச்சுரிமை பூண்ட சேக்கிழார், அம் மன்னனது வேண்டுகோட் கிணங்கித் தில்லைப்பதியையடைந்து கூத்தப்பெருமானை இறைஞ்சிப் போற்றி அப்பெருமான் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்க அதனை முதலாகக் கொண்டு திருத்தொண்டர் புராணமாகிய பெருங்காப்பியத்தை இயற்றித் தில்லைக் கோயிலிலுள்ள ஆயிரக்கால் மண்டபத்திற் கூடியிருந்த புனிதர் பேரவையிலே அரங்கேற்றியருளினார். அவ்வரங்கேற்றத்தினைக் கண்டு மகிழ்ந்த அநபாய சோழன் சேக்கிழாரடிகட்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னுந் திருப் பெயர் சூட்டி இறைஞ்சிப் போற்றினான். தொண்டர் சீர்பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து திருத்தொண்டத் தொகையடியார்களின் பெருமையினைச் சிந்தித்துப் போற்றித் தவநிலையில் அமர்ந்து அம்பலவாணரது தூக்கிய திருவடி நீழலையடைந்து இன்புற்றார்.

தில்லைவாழந்தணர்

திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் திருக்கூட்டத்தார் ஒன்பதின்மருள் முதலிற்போற்றிய, கூட்டத்தவராகிய இவர்கள் மூவாயிரவர் என்னுந்தொகையினர். கூத்தப்பெருமானுக்கு உரிமைத்தொழில் பூண்டுவாழும் இவ்வந்தணர்கள் தில்லைத் திருக்கோயிலினுள்ளே இறைவன் பூசனைக்குரிய அகத் தொண்டுகளைச் செய்து வாழ்பவர்கள்; நான்கு வேதங்களையும் ஆறங்கங்களையும் உணர்ந்தவர்கள்; முத்தீ வளர்த்து வேள்வி செய்பவர்கள்; அறுதொழில் ஆட்சியினாலே வறுமையை நீக்கியவர்கள்; திருநீறு உருத்திராக்கம் பூண்டு சிற்றம்பல மேய செல்வன் கழலேத்தும் செல்வத்தையே உயர்ந்த செல்வமாகக் கொண்டவர்கள் தங்கள் வாழ்வாகவும் வைப்பாகவும் தில்லையிற் கூத்தப் பெருமானை வழிபட்டு உலகெலாம் புகழும் வண்ணம் மானமும் பொறையுந் தாங்கிமனையறம் புரிந்து வாழ்பவர்கள். எனச் சேக்கிழாரடிகள் இவ்வந்தணர்களது பெருமையினை விரித்துக் கூறியுள்ளார்.

வேத விதிப்படி வேள்விபுரியும் தில்லை மூவாயிரவராகிய இத்திருக்கூட்டத்தார் தில்லையிற் கூத்தப்பெருமானைக் கண நேரமும் பிரியாது போற்றிவழிபடும் இயல்பினர். படைத்தற்