பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

யடைந்து தம் மனைவியாரை அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரத்தின் முன்னுள்ள குளத்தில் மூழ்குபவர் கோலொன்றினையெடுத்து ஒருமுனையைத் தாமும் மற்றொரு முனையை மனைவியாரும் பற்றிக்கொண்டு, தாம் இருவரும் கைப்பற்றி முழுகுதற்குத் தடையாயுள்ள தங்கள் சபதத்தைச் சிவயோகியார்க்கு எடுத்துரைத்து மூழ்கினார். முதுமைப் பருவத்தினராகிய அவ்விருவரும் குளத்தில் மூழ்கி எழும்போது இறைவனருளால் இளமை பெற்றுத் தோன்றினார்கள். அந்நிலையிற் சிவபெருமான் உமையம்மையாருடன் விடை மேல் தோன்றி அவ்விருவர்க்கும் அருள் புரிந்து மறைந்தருளினார். இவ்வாறு திருநீலகண்டக் குயவனாரும் அவர்மனைவியாரும் இளமை பெற்றுத் திகழச் செய்தமையால் திருப்புலிச்சரப் பெருமான் கோயில் இளமையாக்கினார் கோயில் எனப் பெயர் பெறுவதாயிற்று.

திருநாளைப்போவார் நாயனார்.

நந்தனார் என்னும் இயற்பெயருடைய இவர், மேற்காநாட்டு ஆதனூரில் தீண்டாதார் மரபில் தோன்றியவர்; சிவபெருமான் திருவடிக்கண் பதித்த நெஞ்சுடையவர். இறைவன் புகழ்த் திறங்களை இன்னிசையாற் பாடவல்லவர். இவர் திருப்புன்கூர் சென்று சிவலோகநாதரை நேரே வழிபடவிரும்பியபோது இறைவன் திருவருளால் கோயிற் சந்நிதியிலுள்ள நந்தி விலகியது. சிவலிங்கப் பெருமானை நேரேகண்டு குறிப்பிட்ட நந்தனார், அங்கு ஒரு திருக்குளத்தை வெட்டினார். தில்லைத் திருமன்றத்தில் இறைவன் ஆடியருளும் அற்புதத் திருக்கூத்தினை நேரிற்கண்டு மகிழ எண்ணினார் நந்தனார், அதற்குத் தாம் தீண்டாதார் மரபிற் பிறந்தமை தடையாதலை யெண்ணி நாளைப்போவேன் நாளைப்போவேன் என்று கூறிக்கொண்டிருந்தமையால் இவர் நாளைப்போவார் எனப்பெயர் பெற்றார். ஒருநாள் தில்லைச்சிற்றம்பலத்தைக் கண்டு இறைஞ்ச வேண்டும் என்ற எண்ணம் மீதூர்தலால் தம் ஊரைவிட்டுப் புறப்பட்டார். தில்லைப்பதியையடைந்து வலம்வந்த நந்தனார், தமது பிறப்பின் நிலையினை யெண்ணித் தில்லைக்கோயிலினுள்ளே நுழைதற்கு அஞ்சினார். இறைவன் திருவருளை