பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

புராணத் திருமலைநாதர்: தில்லையிற் பிறந்த இவர், தில்லை வாழந்தணர்கள் வேண்டுகோட்கிணங்கிச் சிதம்பரபுராணத்தை இயற்றியுள்ளார். மதுரைச் சொக்கநாதருலாவை இயற்றியவரும் இவரே. இவர், காலம் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு. இவருடையமைந்தர் பரஞ்சோதியார் சிதம்பரப்பாட்டியல் என்னும் இலக்கண நூலை இயற்றியுள்ளார்.

குமரகுருபரர்: பிறக்கும் பொழுது ஊமையாய்ப்பிறந்து முருகப் பெருமான் அருளால் ஊமை நீங்கிக் கந்தர்கலிவெண்பாப் பாடிப் போற்றினார். மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், புள்ளிருக்குவேளூர் முத்துக்குமாரசாமிப்பிள்ளைத் தமிழ் முதலிய செந்தமிழ்ப்பனுவல்களைப் பாடியவர். தருமையாதீனத்தின் நான்காவது பட்டத்தில் எழுந்தருளிய மாசிலாமணி ஞானசம்பந்தரையடைந்தபொழுது ‘ஐந்துபேரறிவுங் கண்களே கொள்ள' என வரும் பெரியபுராணப்பாடற்குப் பொருள் யாது' என அவர் வினவிய நிலையில், தமதுவாக்குத் தடைப்பட்டு அவரையே தம் ஞான குருவாகக்கொண்டு வழிபட்டுத் தமக்குத் துறவுநிலை அருளவேண்டும் என வேண்டிக்கொண்டார். தில்லையில் சிலநாள் தங்கிவருக என ஞான தேசிகர் பணித்த வண்ணம் சிதம்பரத்திற்கு வந்து கூத்தப் பெருமானையும் சிவகாமித்தாயையும் வணங்கி, சிதம்பரச்செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை என்னும் இருபனுவல்களையும் பாடிப்போற்றியுள்ளார்.

வெள்ளியம்பல வாணர்: இவர் தருமையாதீனம் மாசிலாமணி ஞானசம்பந்தரிடம் ஞானோபதேசம் பெற்றவர்; தென்றமிழும் வடமொழியும் தேர்ந்துணர்ந்தவர்; மிருகேந்திரவாகம் மொழி பெயர்ப்பு, - முத்திநிச்சய பாடியம், ஞானாவரண விளக்கம், முதலிய நூல்களை இயற்றி, தில்லையிலே நெடுநாள் வாழ்ந்து கூத்தப்பெருமான் திருவடியை அடைந்தவர்; இவருடைய சமாதி சிதம்பரம் ஞானப்பிரகாசக்குளம் தென்மேற்குக்கரையில் அமைந்துள்ளது.

படிக்காசுத்தம்பிரான்: இவர் தருமபுரவாதீன அடியார்குழாத்துள் ஒருவர். ஒருநாள் தில்லையில் கூத்தப்பெருமான் முன்னிருந்த திரைச்சீலையில் தீப்பற்ற, ஞானத்தாலுணர்ந்து தம்கைகளைப்