பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

பிசைந்து அத்தீயை அவித்தார். நடராசப்பெருமான் தில்லை வாழந்தணர் கனவிலே தோன்றி, 'நமது திரைச்சீலையில் பற்றிய தீயைப்படிக்காசன் அவித்தான். அவனிடத்திற்சென்று கொடுக்க' என ஒரு திருநீற்றுப்பையைத் தந்தருளி மறைந்தார். விழித்தெழுந்த அந்தணர் இறையருளை வியந்து தருமபுரத்திற்குச் சென்று படிக்காசரிடம் அத்திருநீற்றுப் பையைச்சேர்ப்பித்தனர்.

சித்தர் சிவப்பிரகாசர்: குடந்தையிற் றோன்றிய இவர், திருவாவடுதுறை திருமடத்தின் தம்பிரானாக விளங்கினார். விஜய நகர மன்னரின் காரியத்தராகச் சிதம்பரத்திலிருந்த வைணவர் சிலரால் நடராசப் பெருமானது நாள் வழிபாடு தடைப்பட்டது. அதனையறிந்த இவர், குரு ஆணையின்படி வேலூரை அடைந்து இலிங்கமநாயக்கரைக் கண்டு தம் கருத்தை எடுத்துரைத்துத் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நாள் வழிபாடு தடையின்றி நிகழ ஏற்பாடு செய்தார்.

அகோர சிவாச்சாரியர்: ஆதிசைவராகிய இவர், தில்லையில் அனந்தீசுவரன் கோயில் சந்நிதியில் திருமடம் அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர். தில்லையில் கூத்தப் பெருமான் திருப்பணிகளைக் கண்காணித்து வந்த இவர், சைவசமய நெறிமுறைகளை வகுத்துரைக்கும். 'அகோர சிவாசாரியார் பத்ததி' என்னும் நூலை இயற்றியவர் ஆவார்.

கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவசித்தாந்த சமரச அநுபவ ஞானியாகிய தாயுமானப் பெருந்தகையார் தாம் பாடியருளிய பாடல்களில் ஆகாரபுவனம் - சிதம்பரரகசியம் என்ற பகுதியில் தில்லையம்பலவன் ஆடியருளும் நாதாந்தத் திருக்கூத்தின் மேன்மையையும் அக்கூத்து எச்சமயத்தார்க்கும் பொதுவாய் நிகழுந்திறத்தினையும் இனிது விளக்கியுள்ளார். இப்பாடற் பகுதியைக்கூர்ந்து நோக்குங்கால் தாயுமான அடிகளார் தில்லைப் பதியை யடைந்து கூத்தப் பெருமான் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக்கூத்தினை நேரிற் கண்டு மகிழ்ந்தவர் என்பது நன்குபுலனாகும்.

உலகெலாமாகி வேறாய் உடனுமாய் விளங்குகின்ற இறைவன் ஞான மயமான பெருவெளியிலே பேரொளிவடிவாய் எல்லார்க்கும்