பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பொதுவாய் நடம் புரிந்தருள்கின்றான் என்னும் பேருண்மையினை அறிவுறுத்தும் நிலையில் அமைந்ததே தில்லைச்சிற்றம்பலமாகும். இங்கு இறைவன் சமயங்கடந்த தனிமுதற் பொருளாய் எவ்லாவுயிர்களும் உய்ய அருட்கூத்து இயற்றுகின்றான் என்பது சிவநெறிச் செல்வர்களது துணிபாகும். இவ்வுலகிற் பல்வேறு சமயங்களையும் கடைப்பிடித் தொழுகுகின்ற எல்லா மக்களும் தம்மிடையேயுள்ள சாதிசமய வேற்றுமைகளைக்களைந்து 'ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்' என்னும் ஒருமை நிலையில் நின்று இறைவனை வழிபட்டு உய்திபெறுதற்குரிய பொது மன்றாய் திகழ்வதே தில்லைப் பெருங்கோயிலாகும். இவ்வாறு எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு சமயங்கடந்த தனிமுதற் பொருளாகச் சிவ பெருமானை வழிபடும் சமயமே சைவசமயமாகும். சமயா தீதப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளை ஞானமயமாகிய மன்றில் ஆடல் புரிவோனாகக் கண்டுவழிபடும் தெய்வசபையே தில்லையிலுள்ள திருச்சிற்றம் பலமாகும். சைவசித்தாந்த சமயத்தின் சமரச நிலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது தில்லைப் பொது என்னும் இவ்வுண்மை யினை

"சைவசமயமே சமயம் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய் வந்துழலும் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதரும்
தெய்வசபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்தீரே"

(காடும் கரையும் - 2)

எனவும்,

“சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமய சங்கேதப் பொருளும் தானொன்றாகப்
பன்மார்க்க நெறியினிலுங் கண்டதில்லை
பகர்வரிய தில்லைமன்றுட் பார்த்த போதங்
கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியேயென்ன
எச்சமயத்தோர்களும் வந்திறைஞ்சாநிற்பர்
கன்மார்க்கநெஞ்சமுள எனக்குந்தானே
கண்டவுடன் ஆனந்தங் காண்டலாகும்"

(ஆகாரபுவனம் சிதம்பரரகசியம்-12)