பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களவியலுரையாசிரியர் முச்சங்கங்களின் வரலாறு கூறுமிடத்துத் தெளிவாகக் குறித்துள்ளார்.

ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்குப்பின் தமிழரொடு நெருங்கிய தொடர்பில்லாத ஆரியர்கள் தமிழகத்திற்கு குடிபுகுந்து நாடாள் வேந்தரது ஆதரவினைப் பெற்றுத் தமிழ் மக்களொடு கலந்து தமிழரது சமுதாய வாழ்வில் படிப்படியாக மேலிடத்தைப் பெறுவராயினர். அந்நிலையில் தமிழ் மக்களது தொன்மை நாகரிகத்தொடு பொருந்தாத ஆரியக் கொள்கைகள் சில தமிழ் மக்கள் வாழ்வில் மெல்ல மெல்ல இடம் பெறுவனவாயின. பிற்காலத்தில் இந்நாட்டில் ஆரியராற்பு குத்தப் பெற்ற வருணாச் சிரமக் கோட்பாடுகள் சில பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத் தில் குறிப்பாகத் தொல்காப்பிய மரபியலில் இடைச்செருகலாக நுழைக்கப்பெறுவனவாயின.

இங்ஙனம் தமிழகத்தின் தொன்மை வாழ்வியல் புலனாகாதவாறு ஆரிய வருணாச்சிரமக் கோட்பாடு மேலோங்கி நின்றகாலம், தொல்காப்பியவுரையாசிரியர்களாகிய இளம்பூரணர், பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலியோர் வாழ்ந்த பிற்காலமாகும்.இங்ஙனம் தமிழ்மக்களது வாழ்வியற் கொள்கைகள் அயலவர் கொள்கைகளால் மீது மறைக்கப்பட்ட பிற்காலத்தில் தொல்காப்பியத்தின் பொருள் மரபினை உள்ளவாறு உணரும் வாய்ப்பு நாளடைவிற் குறைந்து வருவதாயிற்று. இத்தகைய இருள் நிலையிலும் தமிழ் மக்களது வாழ்வியல் நூலாகிய தொல்காப்பியத்தின் பொருளையுணர்தற்குத் தம் உரைகளாகிய ஒளிவிளக்கினையேற்றியுதவிய பெருமை இளம்பூரணர், பேராசிரியர் முதலிய உரையாசிரியர்களுக்கே உரியதாகும். இவர்களுள் இளம்பூரணர் எழுதிய உரையொன்றே தொல்காப்பியம் முழுவதற்கும் கிடைத்துள்ளது. இளம்பூரணரும் பேராசிரியரும் தமக்குமுன் உரை கண்ட பிறர் உரைகளைத் தம் உரையிற் குறிப்பிடுதலால் அவ்விருவர் காலத்திற்கு முன்னரே தொல்காப்பியத்திற்குப் பலரும் எழுதிய உரைகள் வழங்கியிருத்தல் வேண்டும் என்பது புலனாகின்றது.

1. தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம் முதற்பகுதி பக்கம் 16 ,301-303 இரண்டாம் பகுதி பக்கம் ל 3

6.

6