பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 3

கூறாமையின் அவர் காலத்தில் குற்றியலுகரத்திற்குப் புள்ளி யிட்டெழுதும் வழக்கம் இல்லையென்பது புலனாகும். அன்றியும் குற்றியலுகரமும் புள்ளிபெறும் என்பதொன்றே இச் சூத்திரக் கருத்தாயின் மெய்யினளபே யரையென மொழிப’ என்பதனை யடுத்து அவ்வியல் நிலையும் ஏனைமூன்றே என மாட்டெறிந் தாற்போல மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல் எனவும் “எகர வொகரத் தியற்கையும் அற்றே எனவும் வருஞ் சூத்திரங் களையடுத்துக் குற்றியலுகரமும் அற்றென மொழிப என இச்சூத்திரத்தையுங் கூறியிருப்பர். ஆசிரியர் அங்ஙனங் கூறாது புணரியலாகிய இவ்வியலிற் கூறுதலால் குற்றியலுகரமும் மெய்யீறுபோல உயிரேற இடங் கொடுக்கும் என்பதே தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு துணியப்படும்.

   இங்ஙனமன்றிக் குற்றியலுகர வீற்றின்முன் உயிர் முதன் மொழி வருங்கால் நிலைமொழியீற்றுக் குற்றுகரம் கெடுமெனக் கொண்டார் வீரசோழிய நூலார். ஆவி பின்தோன்றக் கெடும் குற்றுகரம் என்பது வீரசோழியம். இக்கருத்தினை யொட்டியே,
     உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் 
     யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி, (நன். 164)

எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர்.

   இவ்வாறு குற்றுகர வீற்றின் முன் உயிர்முதன்மொழி வருங்கால் நிலைமொழியீற்றுக் குற்றுகரங்கெட நின்ற வொற்றின் மேல் வருமொழிமுதலுயிர் ஏறிற்றென்று கொள்ளுதல் கூடா தென்றும், நாகரிது என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடிநின்றல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின் நாகு என்பதன் இறுதியி லுள்ள குற்றியலுகரம் கெடாதுநின்றே அரிது என்னும் வரு மொழி முதலிலுள்ள அகரவுயிர்க்கு இடந்தந்து அவ்வுயிரோடுங் கூடி நிற்குமென்றும் நச்சினார்க்கினியர் இச்சூத்திரவுரையுள் தெளிவாக விளக்கி உரையாசிரியர் கொள்கையை வலியுறுத்தியுள்ளார்.
   தொல்காப்பிய முதற்குத்திர விருத்தியுள் எழுத்தெனப் படுப என்னுந் தொடர்க்குப் புணர்ச்சிவிதி கூறுங்கால் “இனி யாசிரியர் நூறென்கிளவியொன்று முதலொன்பாற் - கீறுசினை யொழிய வினவொற்றுமிகுமே எனவும், ஆறன்மருங்கிற் குற்றியலுகரம் ஈறுமெய்யொழியக் கெடுதல் வேண்டும் எனவும், நூறு என்னும் எண்முன்னும் ஆறு என்னும் எண்முன்னும்