பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 125

     பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப 
     வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந் 
     தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் 
     ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் 
     சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா 
     திடைநின் றியலுஞ் சாரியை யியற்கை 
     உடைமையு மின்மையும் ஒடுவயி னொக்கும்.
                                              (தொல்,132)
   இது சாரியைகட் கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணங் கூறுகின்றது.
   (இ-ள்) பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும், பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும், பெயரும் பெயருமாய்க் கூடியும் இசைப்ப, வேற்றுமையுருபு தொகாது நிலைபெற்றவிடத்தினும், அவ்வேற்றுமை யுருபுகள் தோற்றுதல் வேண்டாது தொக்க விடத்தும், தாந்தாம் பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கொடு பொருந்திச் சாரியைபெறும் புணர்மொழிகளைப் பிரித்துக் காணுமிடத்து, அவற்றின் பின்வந்து விளங்காது அவற்றிடையே நின்று நடக்கும் சாரியையின் இயல்பு. அச்சாரியைகள் உண்டாத லும் இல்லையாதலும் ஒடுவுருபினிடத்து ஒத்துவரும் எறு.
     “சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்காது 
     இடை நின்றியலுஞ் சாரியை இயற்கை”
   என்றதனால், புணர்மொழியினிடையே சார்ந்து இயைந்து நிற்கு மியல்புடையது சாரியையென அதன் பெயர்க் காரணமும் கூறினாராயிற்று. ஒட்டுதற் கொழுகிய வழக்காவது, நிலைமொழி யையும் வருமொழியையும் தனித்தனியே இரு வேறு மொழிகளாக நிறுத்திப் புணர்த்தற்குரிய சொல் நடை. இவ்வாறன்றி நிலாக்கதிர், நிலாமுற்றம் என ஒருமொழிபோல் நடப்பன ஒட்டுநற்கொழுகிய வழக்கு ஆகா ஆதலின் சாரியை பெறாவாயின என்பர் உரையாசிரியர்.
   பூவினொடு, பூவொடு என ஒடுவுருபு சாரியை பெற்றும் பெறாதும் வந்தது. எல்லா நம்மையும் என்புழி உம்சாரியை ஈற்றினும் வருதலின் இடை நின்றியலும் என்றது. பெரும் பான்மைபற்றிக் கூறியதெனக்கொள்க.
     அத்தே வற்றே யாயிரு மொழிமேல் 
     ஒற்றுமெய் கெடுதல் தெற்றென் றற்றே 
     அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. (தொல்,133)