பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தொல்காப்பியம்-நன்னூல்



      ஏழ் என்பதன் முன் நூறாயிரம் என்பது வருமொழியாய் வருமிடத்து முற்கூறியவாறு நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் இல்லை. இவ்வியல்பு முடிபினை,
      நூறுர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் 
      கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே.           (தொல்.392)

எனவரும் சூத்திரத்தால் உணரலாம்.

    (உ-ம் ஏழ்நூறாயிரம் எனவரும்.
        ஆசிரியர் தொல்காப்பியனார் ஏழ்’ என இதனை ஒற்றிற்று மொழியாகக்கொண்டு புணர்ச்சி விதி கூறியுள்ளார். நன்னூலாசிரியர் பவணந்தியார் இவ்வெண்ணினை ஏழு என உயிரீற்று மொழியாகக் கொண்டுள்ளார். இந்நுட்பம், ஏழன் உயிரும் ஏகும் ஏற்புழி” (நன்-உயிரீற்றுப்-38) என அவர் விதி கூறுமாற்றால் நன்கு விளங்கும். ஏழ் நெடுமுதல் குறுகும்’ என்னும் தொல்காப்பிய விதியை ஏழ் குறுகும் என்ற தொடரிற் பவணந்தியார் உடன்பட்டுள்ளமை காணலாம்.
        தெரியச் சொல்லப்பட்ட மெய்யிறு வருமொழியொடு புணரும் இயல் பின்கண், மேல் முடித்த முடிபுகளன்றி வழக்கினுட் கண்டு முடித்தற்கு உரியன பிறவும் உளவாயின் அவற்றையும் இங்குக் கூறப்பட்டவற்றுடன் கருதி நோக்கிச் சாரியை பெறுவனவற்றிற்குச் சாரியையும் எழுத்துப்பெறுவன வற்றிற்கு எழுத்தும் கொடுத்து ஏற்றவாறு முடித்துக்கொள்க Tait urrrr,
         உணரக் கூறிய புனரியன் மருங்கிற்
         கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே.     (தொல்.465)

என இவ்வியலுக்குப் புறனடை கூறி முடித்தார் ஆசிரியர். இவ்வாறே பவணந்தியாரும் மெய்யீற்றுப் புணரியலின்

இறுதியில்,

        இடையுரி வடசொலின் இயம்பிய கொளாதவும் 
        போலியும் மரூஉவும் பொருந்திய வாற்றிற்கு 
        இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே.          (நன்.239)

எனப் புணரியல்களுக்குப் புறனடை, கூறி முடித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கதாகும்.