பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒற்றுயிர் முதலிற் றுருபுகள் புணர்ச்சியின்

       ஒக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே,

எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார்.

   பவணந்தி முனிவர் தாம் இயற்றிய நன்னூல் சுருக்க நூலாதலின் அதன்கண் விகுதி, பதம், சாரியை, உருபு என்னும் நான்கின் புணர்ச்சிக்கண்ணும் விதிகள் பொதுப்படக் கூறப் பட்டனவாயினும் அவ்விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும் இவ்விதி இதற்குப் பொருந்தாது என உய்த்துணர்ந்து எவ்விதி எதற்குப் பொருந்துமோ அவ்விதியை அதற்குக் கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்தும் முறையில்,
       விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும் 
       உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே. (நன்.265)

எனப்புறனடைகூறியுள்ளமை ஆழ்ந்துணரத்தக்கதாகும். இச் குத்திரவுரையில் நன்னூலுரையாசிரியர்கள் எடுத்துக் காட்டிய விளக்கங்கள கூர்ந்துணரத்தக்கனவாகும்.

   இவ்வதிகாரத்துள் இதற்கு இது முடிபென்று விதிக்கத் தருவனவற்றையெல்லாம் தனித்தனி வரையறுத்து விதிகறத் தொடங்கின் அவை வரம்பின்றி விரியுமாதலால் வகுத்து விதி கூறியவற்றின் இலக்கணங்களை ஏதுவாகக்கொண்டு வகுத்து விதி கூறாதவற்றையும் கருதலளவையால் வகுத்து விதியுரைத்துக் கொள்க என அறிவுறுத்தும் முறையில்,
       இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும் - 
       விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான்
       வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே,      (நன்.257)

எனப் பவணந்தி முனிவர் கூறிய அதிகாரப் புறனடையும் மேற்காட்டிய நூற்பாக்களுக்கு உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டிய உதாரணங்களும் விளக்கங்களும் எழுத்ததிகாரத்திற்கு அமைந்த புறனடை விதிகளாக இங்கு ஒப்புநோக்கி யுணர்ந்து கொள்ளத்தக்கனவாகும்,

       “கூறிய குன்றினும் முதனூல் கூட்டித் 
       தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன் 
       ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே”

என்றார் பல்காப்பியனாரும்.