பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

தொல்காப்பியம்-நன்னூல்



பிற்சேர்க்கை

உயிரெழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு நெட்டெழுத்துக்கள் பிறப்பு முதலியவற்றால் ஒத்த ஒலியமைப்புடையன என்பதும், ஒத்த குற்றெழுத்தில்லாத ஐகார ஒளகாரங்களுக்கு முறையே இகர உகரங்கள் இசையால் ஒத்தன என்பதும்,

குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே. (தொல். 4)

ஐ ஒள வென்னும் ஆயீ ரெழுத்திற்கு
இகர உகரம் இசைநிறை வாகும். (தொல். 42)

எனவரும் நூற்பாக்களால் உணர்த்தப்பட்டன. இவ்வாறே கசடதபற என்னும் வல்லெழுத்தாறுக்கும் ஙஞணநமன என்னும் மெல்லெழுத்துத்தாறும் முறையே ஒத்துப் பொருந்தும் ஓசையுடையன ஆதலால் அவற்றைக் கிளையொற்று என வழங்குவர் தொல்காப்பியனார். இவ்விரு சூத்திரங்களையும் அடியொற்றி,

ஐ ஒள இஉச் செறிய முதலெழுத்து
இவ்விரண்டு ஓரின மாய்வரல் முறையே. (நன். 71)

என அஆ, இஈ, கங, சஞ, என்றாங்கு எழுத்துக்களை இனப்படுத்தினார் நன்னூலார்.

தானம், முயற்சி, அளவு, பொருள்,வடிவு
ஆனவொன் றாதிஓர் புடையொப்பு இனமே. (தன். 72)

என இனமென்றதற்குக் காரணமுங் கூறினார்.

எழுத்துக்களுக்குப் பிறப்புணர்த்தும் நிலையில் உயிரெழுத்துக்களுள்ளும், மெய்யெழுத்துக்களுள்ளும் பல எழுத்துக்களுக்குச் சேர்த்துப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட்டனவேனும் அவை தனித்தனி எழுத்தாதற்கேற்ற ஒலிவேறுபாடுடையன என நுணுகியுணர்தல் வேண்டும் என்பதனை,

தத்தந் திரிபே சிறிய வென்ப. (தொல், 88)

எனவரும் பிறப்பியற் சூத்திரத்தில் ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்துள்ளார். அவர் குறித்தவண்ணம் எழுத்துக்களிடையே யமைந்த சிறிய வேற்றுமைக்குரிய ஒலி முயற்சியாகிய காரணங்களை,

எடுத்தல் படுத்தல் நலித லுழப்பிற்
றிரியும் தத்தமிற் சிறிதுள வாகும். (நன். 88)