பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தொல்காப்பியம்-நன்னூல்


ஆவியு மொற்று மளவிறந் திசைத்தலும்
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின், (நன். 99)

எனச் சூத்திரம் செய்தனர் நன்னூலார்.

   இனி இச்சூத்திரத்து ஆதியென்றமையான் நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் தூக்குஞ் சொல்லாகிய நாவல் என்பதன் கண்ணும் குறிப்பிசை, முறையீடு, புலம்பல் முதலியவற்றின் கண்ணும் உயிரும் ஒற்றும் அளபிறந் திசைக்கு மெனக் கொண்டார் பின் வந்த உரைகாரர்.
   நச்சினார்க்கினியர் ‘அளபிறந்துயிர்த்தலும்’ என்னுஞ் சூத்திரத்தில் இசையொடுசிவணிய என்பதற்கு “இசைத்தலோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்கண்’ எனப் பொருள்கூறி, உயிரும் ஒற்றும் செய்யுட்கண் அளபிறந்திசைக்குமெனக் கொண்டார். இசையொடு சிவணிய என்ற சொற்றொடர், நரம்பின் மறைய என்பதன் அடைமொழியாகலானும், தன்னுாலே பற்றாகப் பிறநூற்கு வருவதோர் இலக்கணங் கூறுதற்கு எடுத்துக் காட்டாகப் பேராசிரியர் இதனைக் குறிப்பிடுதலானும் அது கருத்தன்றென்க.


2. மொழிமரபு
   மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபெனப்பட்டது என இளம்பூரணரும், எழுத்தானாம் மொழியது மரபு உணர்த்துகின்றமையின் இவ்வோத்து மொழி மரபெனக் காரணப் பெயர்த்தாயிற்றென நச்சினார்க்கினியரும் கூறுவர். எழுத்துக்களுக்கு மொழியிடையுளதாம் அடிப்பட்ட இயல்பினை ஆசிரியர் இவ்வியலான் உணர்த்துகின்றாரென்பது கொள்ளத்தகும். இவ்வியலுட் கூறுகின்ற இலக்கணம் தனி நின்ற எழுத்திற்கன்றி மொழியிடை யெழுத்திற்கென இளம்பூரணர் கூறுவர்.
   இவ்வியலாற் கூறப்படுவன குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்னும் சார்பெழுத்திலக்கணம், உயிரளபெடை, மொழியாக்கம், மெய்களினியக்கம், ஈரொற்றுடனிலை, மகரக் குறுக்கம், போலி, ஐகாரக்குறுக்கம், மொழி முதலெழுத்துக்கள், மொழிக்கிறாமெழுத்துக்கள் ஆகிய இவைகளாம் இவையெல்லாம் மொழியிடை வைத்துணரத் தக்கனவாதலின் ஈண்டுணர்த்தப்பட்டன.