பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125



97. நயவஞ்சகச் செயல்

அரேபியாவில் சில கோத்திரங்களைத் தவிர, ஏனையவை இஸ்லாத்துக்கு விரோதமாகவே இருந்தன.

விக்கிரக வழிபாட்டைத் தங்கள் மதமாக கொண்டிருந்த அரேபியர்களிடம் அதை அகற்றி ஏக இறை வணக்கத்தை நிலை நிறுத்த இஸ்லாம் பாடுபட்டது. அதுவே அவர்களுடைய விரோதத்துக்கு முதல் காரணம்.

எந்தச் சட்ட,திட்டத்துக்கும் உட்படாமல், அன்னியர் பொருட்களை அபகரித்தும், காலம் முழுதும் தீய வழிகளிலேயே கழித்தும் வாழ்ந்த அவர்களுடைய வாழ்க்கையைக் கண்டித்து, தீய வழக்கங்களை முற்றிலும் கை விடும்படி இஸ்லாம் அறிவுறுத்தியது. அது அவர்களுடைய விரோதத்துக்கு மற்றொரு காரணம்.

பத்ருச் சண்டையில், முஸ்லிம்கள் அடைந்த வெற்றியினால் அரேபியர்கள் திகில் அடைந்து, தங்களுடைய விரோதத்தை வெளியே காட்டாமல் இருந்தனர்.

உஹத் சண்டையில் முஸ்லிம்கள் கஷ்டமும், நஷ்டமும் அடைந்ததால், அரேபியர்களுக்குப் பயம் நீங்கிற்று.

அந்த ஒவ்வொரு கூட்டத்தினரும், முஸ்லிம்களைத் தாக்க முற்பட்டார்கள். அதனால் சிறு சிறு சண்டைகள் பல அந்த வருடத்தில் உண்டாயின.

அவ்வருடம் ஸபர் மாதத்தில், பனூ ஆமீர் கோத்திரத்தின் தலைவரான அபூ பரா என்பவர், நாயகத்திடம் தங்கள் வகுப்பினர்களை இஸ்லாத்துக்கு அழைப்பதற்காக முஸ்லிம் பிரச்சாரகர்கள் சிலரைத் தம்மோடு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவர் அழைக்கும் பகுதியில், முஸ்லிம் விரோதிகள் அதிகமாயிருந்ததால், அங்கே பிரச்சாரகர்களை அனுப்பி வைக்கப் பெருமானார் அவர்கள் முதலில் சம்மதிக்கவில்லை.