பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128



அந்த இருவரில் ஒருவரான குபைப் வெட்டப்படுவதற்கு முன்னர் இரண்டு முறை தொழுகைக்கு அனுமதி கேட்டார். தொழுகை நிறைவேறியதும், எதிரிகளை நோக்கி, “வெகு நேரம் வரை, தொழ எனக்கு விருப்பம் உண்டு. ஆனால் நான் மரணத்துக்குப் பயந்து அவ்வாறு செய்தேன் என்று நீங்கள் நினைத்து விடக் கூடும். ஆதலால், வெகுநேரம் தொழவில்லை” என்று கூறி விட்டு, அரபியில் ஒரு கவிதை பாடினார். அதன் கருத்து: “இஸ்லாத்துக்காக நான் வெட்டப்படும் போது, எவ்வாறு வெட்டப்படுவேன் என்ற கவலை எனக்கு இல்லை. நான் வெட்டப்படுவது ஆண்டவனுக்காகவே. அவன் விரும்பினால் என்னுடைய உடலின் ஒவ்வொரு சிறிய பகுதிக்கும், நல்லருளை இறக்கலாம்”

மற்றொருவரான ஸைதை விலைக்கு வாங்கியிருந்த ஸப்வான் என்பவ்ர் அவரைச் சிரச்சேதம் செய்வதற்கு ஒரு நாள் குறிப்பிட்டு, இந்த நாளில் குறைஷிகள் எல்லோரையும் வருமாறு சொல்லியிருந்தார். அதைக் காண்பதற்காக எல்லோரும் வந்து கூடினார்கள். அவர்களில் அபூஸூப்யானும் ஒருவர்.

அப்பொழுது ஸைதைப் பார்த்து, “இந்த நேரத்தில் உமக்குப் பதிலாக, முஹம்மதை வெட்டுவதாயிருந்தால், அதை உம்முடைய நல்வாய்ப்பாக நீர் கருத மாட்டீரா? உண்மையைக் கூறும்” என்று கேட்டார் அபூஸூப்யான்.

அதற்கு, “நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் பாதங்களில் முள் தைப்பதனால், என் உயிர் பாதுகாக்கப்படும் என்ற போதிலும், அவர்கள் பாதங்களில் முள் தைப்பதை விட, என் உயிரைப் பலி கொடுக்கவே நான் மனப்பூர்வமாகத் தயாராயிருப்பேன் என்பதை ஆண்டவன் சத்தியமாக நான் கூறுகிறேன்” என்றார் ஸைத்.

அதைக் கேட்ட அபூஸூப்யான், “முஹம்மதை அவரைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு உண்மையான அன்போடு நேசித்து வருகிறார்களோ, அவ்வளவு அன்போடு வேறு எவரையும் அவருடைய தோழர்கள் நேசித்து வந்திருப்பதை நான் பார்த்ததில்லை” என்று கூறி வியப்படைந்தார்.

அதன்பின் ஸைதை வெட்டிக் கொன்று விட்டனர்.