பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143



முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்த பனூ குறைலா கூட்டத்தாரை, அவர்களுக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டுவதற்கு பனூ நலீர் கூட்டத்தார் முயன்றார்கள்.

பனூ நலீர் கூட்டத் தலைவரான ஹூயைய் இப்னு அக்தப், பனூ குறைலா கூட்டத் தலைவர் கஅபிடம் சென்று, தங்களோடு சேர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டார்.

அவ்வாறு செய்ய இயலாது என கஅப் முதலில் கூறினார். பனூ நலீர் கூட்டத் தலைவர் அதோடு விடவில்லை. “தாம் ஏராளமான படைகளுடன் வந்திருப்பதாகவும், குறைஷிகளும், அரேபிய தேசத்தார் அனைவருமே ஒன்று திரண்டு வந்திருப்பதாகவும், எல்லோரும், முஹம்மதின் இரத்தத்தில் தாகம் உடையவர்களாக இருப்பதாயும் இஸ்லாத்துக்கு முடிவு காலம் வந்து விட்டதாகவும்" கூறி, "இத்தகைய அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது” என்றும், மேலும் பலவாறு எடுத்துச் சொன்னார்.

அதைக் கேட்ட கஅப், “நான் முஹம்மதுடன் உடன்படிக்கை செய்திருக்கிறேன். வாக்குக் கொடுப்பதில் எப்போதும் அவர் உண்மையாக நடப்பவர் என்று எனக்கு நன்றாகத் தெரியும், அப்படியிருக்கும்போது, இப்போது நான் உடன்படிக்கையை மீறுவது நல்லதல்ல” என்று சொன்னார்.

ஆனால் பனூ நலீர் கூட்டத் தலைவர், பலவாறான தந்திரங்களைச் செய்து, அவரை இணங்குமாறு செய்து விட்டார்.

அதன் விளைவாக, பனூ குறைலா கூட்டத்தார் முஸ்லிம்களுக்கு விரோதமாக குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர்.

உடன்படிக்கைக்கு விரோதமாக பனூ குறைலா கூட்டத்தினர் நடந்து கொண்ட செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்தது. அது உண்மைதானா என அறிந்து வருமாறு இரண்டு அன்ஸாரிகளை அனுப்பினார்கள். அவர்கள் இருவரும், முஸ்லிம்கள் ஆவதற்கு முன்னர் யூதர்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தவர்கள்.

அவ்விருவரும் பனூ குறைலா கூட்டத்தாரிடம் சென்று. உடன்படிக்கையை நினைவு படுத்தினார்கள்.