பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153



தலைவர்களை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்; அதன் பின், நாம் இரு கூட்டத்தாரும் இணைந்து, அவர்களுடன் சண்டை செய்து அவர்களைத் துரத்தி விடுவோம். அவ்வாறு நாம் செய்யா விடில், அவர்கள் மதீனாவையும், சுற்றுப்புறங்களையும் கைப்பற்றி விடுவார்கள். இதுவே அந்த இரகசியச் செய்தி” என்று கூறி முடித்தார் நயீம்.

அவர் கூறிய மேற்கண்ட செய்தி குறைஷிகளுக்குக் கலக்கத்தை உண்டாக்கியது.

நயீம் கத்பான் கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடமும் மேற்கண்டவாறு கூறினார். அவர்களும் கலங்கி விட்டனர்.

கத்பான் கூட்டத்தின் தலைவரான நயீம், பனூ குறைலா கூட்டத்தார், குறைஷிக் கூட்டத்தார், கத்பான் கூட்டத்தார் ஆகியோரிடையே சென்று, சாதுர்யமாகப் பேசி, அவர்களிடையே பிளவு உண்டாக்க முயன்றார்.


115. கூட்டத்தில் பிளவு உண்டாகி விட்டது

குறைஷிகளும், கத்பான் கூட்டத்தினரும் கூடி ஆலோசித்தார்கள்.

அபுஜஹிலின் மகன் இக்ரிமாவையும் இன்னும் வேறு சிலரையும் பனூ குறைலா கூட்டத்தாரிடம் தூது அனுப்பினார்கள்.

“இங்கே எங்களுடைய ஒட்டகங்களும் குதிரைகளும் துன்புற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகையால், நாளைக் காலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போர் செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம்” இவ்வாறு தூது வந்த இக்ரிமா கூறினார்.

அதற்கு, பனூ குறைலா கூட்டத்தின் தலைவர்கள், “நாளை எங்களுக்கு ஓய்வு நாள். நாங்கள் ஒரு வேலையும் செய்ய மாட்டோம்.