பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187



அப்பொழுது, மதீனாவில் உள்ள முனாபிக்குகளும் முஸ்லிம்களுடைய நிலைமையை பலவீனமாகக் காட்டி, யூதர்களுக்கு ஊக்கமூட்டி வந்தார்கள்.

பெருமானார் அவர்கள், யூதர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பி, அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை அவர்களிடம் அனுப்பினார்கள். ஆனால், இயல்பாகவே கல் நெஞ்சர்களான யூதர்கள் மேலும் சந்தேகம் கொள்ளத் தொடங்கினார்கள்.

முனாபிக்குகளின் தலைவர் அப்துல்லாஹ் இப்னு உபை, கைபரிலுள்ள யூதர்களுக்கு “முஹம்மது உங்களைத் தாக்கப் போவதாகத் தெரிகிறது. ஆனால், நீங்கள் அவருக்குப் பயப்படக் கூடாது. அவருடன் சேர்ந்திருப்போரின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு. தவிர, அவர்களிடத்தில் தகுந்த ஆயுதங்களும் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்.

இச்செய்தியைக் கேட்டதும் யூதர்கள் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.


140. யூதர்கள் தாக்க வருதல்

யூதர்களின் தலைவர்கள் மதீனாவைத் தாக்குவதற்காக, கத்பான் கோத்திரத்தினரையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்.

தாக்குதலுக்கு ஆரம்பம், அல்கபா என்னும் மேய்ச்சல் நிலத்தில் பெருமானார் அவர்களின் பால் கறக்கும் ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. சிலர் அங்கே போய் இருபது ஒட்டகங்களைக் கைப்பற்றி, மேய்த்துக் கொண்டிருந்த பனூ கிபாரீ கோத்திரத்தைச் சேர்ந்தவரைக் கொன்று விட்டதோடு, அவருடைய மனைவியையும் சிறைப்படுத்தி விட்டனர்.

முஸ்லிம்களில் அம்பு எய்துவதில் திறமைசாலியான ஸலமா இப்னு அமறுக்குச் செய்தி தெரிந்தது. உடனே அவர் கத்பான் கூட்டத்தாரைப் பின்தொடர்ந்து சென்றார். அவர்களோ அருகில் இருந்த குகையில் போய் ஒளிந்து கொண்டார்கள். ஸலமா குகையின்