பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iii

பன்மொழிப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், இஸ்லாமியப் பேரறிஞர் மெளலானா, மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாகிபு M.A., B.Th அவர்களின் அணிந்துரை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நஹ்மதுஹு வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்.


“...(நம்) தூதர் (ஸல்) உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்...” (59:7) என்று இறைவன் தன் திருமறையில் அறிவுறுத்துகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்ததையும், விலக்கியதையுங் கொண்ட அறிவுக் கருவூலம் “ஹதீது” என்று பொதுவாகக் குறிப்பிடப்படும். அவை உலக மாந்தரினம் முழுமைக்கும், எல்லா நிலைகளிலும் பயன்படக் கூடியவை. ஏனெனில் அவர்கள் வாழ்க்கையில், அனைத்துத் துறைகளிலும் மனுக் குலத்துக்கு அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.

“தந்தைதா யிழந்த தனயராய்க், குடும்பத் தலைவராய்,
வணிகராய்த் தரும தவராய்:
நந்திடாச் சமய குரவராய்த் தரும நாதராய்;
நரபதி, ராஜ்ய
தந்திரி, அறப் போர்த் தளபதி, எனினும் தாசர்க்கும்
தாசராய், இணையில்
அந்திய நபியாய் அஹ்மதிவ்வுலகுக்கு அளித்துள
ஞானமே ஞானம்!”

என்று நபி பெருமானாரின்(ஸல்) ஈடு இணையில்லாத இந்த முன் மாதிரித்துவத்தை ஓர் அரிய கவிதையில் சித்தரிக்கின்றார்கள் மறைந்த மாகவிஞர் ம.கா.மு. காதிறு முஹிய்யித்ன் மரைக்காயர் (ரஹ்) அவர்கள்.

நபிகள் பெருமானார் (ஸல்) போதித்த அனைத்தும் அவர்களுடைய தீர்க்கதரிசன வாழ்க்கையிலும், உபதேசங்களிலும், செயல்