பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v



முறைகளிலும், உன்னதமான முறையில் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன. அவர்களின் போதனைகள், அவர்களின் வாய்ப் பேச்சுகளில் மட்டும் அடங்கியிருந்தால், அதை நம்முடைய அன்றாட வாழ்க்கைக்குத் துணை செய்வனவாக அமைவதில் சிரமங்கள் ஏற்படும். எனவே நபி பெருமானாரின் “ஸுனன்” என்னும் செயல் முறைகளே, அவர்களுடைய போதனைகளைச் செயல்படுத்தும் ஒழுங்கை நமக்குக் கற்றுத் தருகின்றன.

இச்செயல் முறைகள் பல்வேறு களங்களில் நிகழ்ந்திருக்கின்றன. இச்சுவையான நிகழ்ச்சிகளில் சிலவற்றைத் தொகுத்து, இனிமையான தமிழில் நமக்கு எடுத்துத் தருகிறார்கள் பசுங்கதிர் எம்கே.ஈ. மவ்லானா அவர்களும், பழம் பெரும் எழுத்தாளரான முல்லை முத்தையா அவர்களும்.

பசுங்கதிர் மவ்லானா அவர்களின் “சேது முதல் சிந்து வரை” என்ற ஆய்வு நூலுக்கு முதற் பரிசு கொடுத்திருக்கிறது தமிழ் வளர்ச்சிக் கழகம். எனவே அவர்களுடைய எழுத்தாற்றலைப் பற்றி நான் எடுத்தெழுத வேண்டியதில்லை.

முல்லை முத்தையா அவர்கள் நாற்பது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துலகில் தன்னிகரற்ற ஓர் இடத்தை வகித்து வருகிறார். சொற் சிக்கனமும், சுவையும், பயனும் மிக்க ஒரு நூல் நடையை தமதாக்கிக் கொண்ட, அருமையான எழுத்தாளர் அவர் ஏற்கெனவே பல அரிய நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குத் தந்தவர்.

இந்த நூலை ஆழ்ந்த கவனத்துடன் படித்துப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அத்துடன் இதற்கு அணிந்துரை எழுதும் ஒரு நல்வாய்ப்பும் எனக்குக் கிட்டிற்று. அல்ஹம்து லில்லாஹ்

இத்தகைய சிறப்பான ஒரு நூலை, சீரிய முறையில் அமைத்து, வாசகர்களுக்கு வழங்கும் நூலாசிரியர்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். நம் வாசகர்கள் இதை உளமார வரவேற்பார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன்.

சென்னை-600 016
அப்துல் வஹ்ஹாப்
ஆசிரியர் : “பிறை”