பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39



விக்கிரக வணக்கம் இருந்தால்தான், தங்களுக்கு அந்தக் கெளரவம் நிலைத்திருக்கும் என்று குறைஷிகள் கருதினார்கள்.

மேலும், வெகு காலமாகவே விக்கிரக வணக்கத்திலே அவர்கள் ஈடுபட்டு வந்ததால், அவர்கள் மனத்திலே அது ஆழமாகப் பதிந்து விட்டது. அதைக் கைவிட்டு விட்டால், தங்களுக்கு மிகுந்த தீமை உண்டாகும் என்ற அச்சமும் அவர்களிடையே இருந்தது.

இக்காரணங்களினால், பெருமானார் அவர்கள், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்துப் பேசுவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, பெருமானார் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் சென்று:

“உங்கள் வயதுக்கும், கெளரவத்துக்கும் நாங்கள் மதிப்பு வைத்துள்ளோம். ஆனால், அதற்கும் ஓர் எல்லை உண்டு. உங்கள் தம்பியின் குமாரர் நம்முடைய தெய்வங்களை வெறுக்கிறார். நம் முன்னோர்களை இகழ்ந்து பழிக்கிறார். அவற்றை நாங்கள் பொறுத்துக் கொள்ள இயலாது இனி மேலும் அவர் அவ்வாறு செய்யாமல் தடுத்து நிறுத்துங்கள். அல்லது அவருடன் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு சேர்ந்தால், உங்கள் இருவருடனும் போரிட்டு நம் இரு கட்சிகளில் ஒரு கட்சி அழியும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” எனக் கூறிச் சென்றனர்.

அபூதாலிபுக்கு இது மிகவும் கவலையை உண்டாக்கிற்று. சமூகத்தாரைப் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அதே சமயம் பெருமானார் அவர்களைக் கை விடவும் மனம் இல்லை.

இந்நிலையில் பெருமானாரை அழைத்து, குறைஷிகள் கூறியதை விவரித்து,"உம்முடைய புதிய கொள்கைகளைக் கைவிட்டு விட்டு, உம் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும்; என் உயிரையும் காப்பாற்றும்!" என வேண்டிக்கொண்டார்.

“என் அருமைப் பெரிய தந்தையே, நீங்கள் எனக்கு உதவியாயிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எனக்கு உண்டான இம் முக்கிய கடமையை நான் ஒருபோதும் கைவிட இயலாது.