பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 நல்வழிச் சிறுகதைகள்

நீர்ப் பூங்கொடிகளில் சின்னஞ்சிறிய கொடி ஒன்று, மற்ற பூங்கொடிகளைப் பார்த்து, "இந்தக் குளத்திலேயே நாம் இனியும் இருந்தால் காய்ந்து கருக வேண்டியதுதான். நீர்ப் பறவைகளைப் போல் நாமும் வேறு எங்காவது போய் விட்டால் என்ன?" என்று கேட்டது.

அதற்குப் பெரிய பூங்கொடி ஒன்று பதிலளித்தது :

"இந்தக் குளம் தண்ணிர் நிறைந்திருந்தபோது தாயைப்போல் நம்மை ஆதரித்துக் காப்பாற்றியது. நீர்ப்பறவைகள் சிறிதுகூட நன்றியில்லாமல் துன்பம் வந்த காலத்தில் பறந்து போய்விட்டன. நாம் நன்றியற்றவர்களாக நடந்து கொள்ளக்கூடாது. காய்ந்து கருகினாலும் இந்தக் குளத்திலேயே கிடந்து சாக வேண்டியதுதான். அதற்கு வந்த துன்பம் நமக்கும் வரட்டும் என்று பங்கு கொள்வதுதான் உறவு" என்று கூறியது. எல்லாப் பூங்கொடிகளும் அதன் கருத்தை ஒப்புக்கொண்டன. குளத்தின் வறண்ட கரையிலேயே அவை ஒட்டிக் கிடந்து தங்கள் உறவை நிலை நிறுத்தின.


கருத்துரை :- வறுமை ஏற்பட்ட காலத்தில் நீர்ப் பறவைகள் போல் பறந்து செல்பவர்கள் உறவினரல்லர். பூங்கொடிகள் போல் ஒட்டிக் கிடந்து பங்கு பெறும் இயல்பினரே உண்மயைான உறவினராவர்.