பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 நல்வழிச் சிறுகதைகள்

ஆனால் என்ன ஏமாற்றம்! அந்த ஆறு வற்றி வறண்டுபோய்க் கிடந்தது. இக்கரையிலிருந்து அக்கரை வரை எங்கும் ஒரே மணல்வெளிதான் கண்ணுக்குத் தோன்றியது. தூரத்தில் கானல்தான் தெரிந்தது.

இருவரும் மனமுடைந்து போனார்கள். சிறிது நேரத்தில் தண்ணிர் கிடைக்காவிட்டால் மயங்கிச் சோர்ந்து விழ வேண்டியதுதான்! அவர்கள் நம்பிக்கை இழந்து சோர்ந்து நின்றபோது ஆடு மேய்க்கும் பையன் ஒருவன் அங்கே வந்தான் ஆற்று மணலைத் தோண்டினான். இரண்டடி ஆழம் தோண்டிய பின் அடியிலிருந்து தண்ணிர் ஊறி வந்தது. இரு கைகளாலும் அள்ளிக் குடித்து விட்டுச் சென்றான். அதைப் பார்த்த வழிப் போக்கர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே மணலைத் தோண்டினார்கள். அங்கேயும் அடியில் நீர் ஊறியது. அவர்கள் தூய்மையான அந்த நீரைப் பருகித் துன்பம் தீர்த்தார்கள் ஆற்றுத் தாயைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே நடந்து சென்றார்கள்.

கருத்துரை :- தான் வறண்டு போனாலும் ஆறு தன் ஊற்று நீரை வழங்கி நாடி வந்தவர்களை நலமடையச் செய்யும். அதுபோல நல்ல குடியில் பிறந்த பெரியோர் தாங்கள் துன்பமடைந்த காலத்தும் நாடி வந்தவர்க்கு நன்மை செய்வார்கள்.