பக்கம்:நாகப்பட்டினம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சமய நாகை

அ. சமயம்

சமையம் என்றால் சமைக்கப்பட்டது என்று பொருள். இதன் தொழிற்சொல் சமையல். சமையம் என்றால் உணவை அமைத்தல் - உணவைப் பக்குவப் படுத்தல் என்னும் பொருள்தான் முதலில் தோன்றும். நாள்தோறும் உண்ட பழக்கத்தால் அவ்வாறு தோன்றும்.

இச்சொல், - "அம்" எனும் வேர்ச்சொல்லைக் கொண்டது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள்,

"அம் - அமை - அமைதல் = பொருந்துதல், ஏற்படுதல், நேர்தல். அமையம் - நேரம், வேளை" என்று தொடங்கி, "அமை - சமை - சமைதல் - அமைதல் = பொருந்துதல்" என்று தொடர்ந்து, இப்பொருளுக்குச் சான்றாக,

"என்றிவை சமையச் சொன்னான்" (கம்ப. இரா. அங்கத - 8) "வனஞ்செல்வதற்கே சமைந்தார்கள் (கம்ப. இரா. நகர்நீங்கு. 143) எனக் காட்டியுள்ளார்.

இப்பொருள் தொடர்பில்தான், "மாந்தன் (ஆன்மா) இறைவனை அடையச் சமையும் (தகுதிபெறும்) நிலை" என்று நிறுவினார். இது வடமொழியன்று என்றும், வடமொழியில் இப்பொருளுக்குரிய மூலம் இல்லை என்றும் காட்டிச் சமையம் சமயம் என்றாயிற்று என்று எழுதி, இது தமிழ்ச்சொல்; தமிழிலிருந்து வடமொழிக்குப் போயிற்று என்றார். (1) -

நாகை பெற்ற புலமைச் சான்றோர் நிறைதமிழ்ச்செம்மல் மறைமலையடிகளாரும் "சமயம்" என்பதற்குக் "காலம், நேரம், அவசரம்" என்னும் பொருள்களை விரித்து, நேரம் என்னும் பொருளிலேயே சமயத்தை விளக்கி,

"சிவம் - எப்பொருளும் கடந்த பெரும் பொருளை ஆராய்ந்த நேரமே சைவ சமயம் என்று உணரற்பாற்று" என்று (2) நிறுவினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/231&oldid=585112" இலிருந்து மீள்விக்கப்பட்டது