பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நாலடியார்-தெளிவுரை

சொல்லப்படுவதான ஒரு நல்ல தன்மையைத், தாம் நட்புச் செய்வதற்கு ஏதுவாகக் கொண்டதே அல்லாமல், அவருடைய மனத்தின் தன்மை அறியப்பட்டே நட்புச் செய்தனர் என்பது, இவ்வுலகத்தில் ஒருபோதும் இல்லையாகும்.

‘ஒருவருடைய மனநிலையறிந்தே நட்புச் செய்தல் இயல்வதன்று; ஆதலால் அவர் நற்குடிப் பிறந்தவரா என்பதை அறிந்து அவருடன் நட்புச் செய்தல் வேண்டும் என்பது கருத்து.

213. யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்

கேன்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல் மெய்யதா, வால்குழைக்கும் நாய்.

பலகாலம் பழகிப்பழகித் தெரிந்திருந்தாலும் தன் பாகனையே சமயத்திற் கொன்றுவிடுவது யானை. ஆனால், தன்னை உடையவனாயிருந்தவன், எறிந்த வேலானது தன் உடலிலே தைத்திருக்கவும் தன் வாலைக் குழைத்து அவனிடம் அன்பு காட்டிக் கொண்டே நிற்பது நாய். அதனால், யானையைப் போன்றவர்களது நட்பினைக் கைவிட்டு, நாய் போன்றவர்களது நட்பையே ஒவ்வொருவரும் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். -

‘தன்னைப் பலகாலம் பேணிக்காத்தவன் என்றறிந்தும் கொல்லும் யானைபோல, நண்பரையே அழிக்கும் தீயவர் உறவு கூடாது; வேல் உடலிலே தைத்திருக்கவும் வால் குழைத்து நிற்கும் நாய்போலத் துன்பம் தாமே இழைத்த காலத்தும் நட்பினை மறவாது அன்புகாட்டும் ஒருவரது சிநேகமே கொள்ளத்தக்கதாகும் என்பது கருத்து.

214. பலநாளும் பக்கத்தார் ஆயினும், நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பலநாளும் நீத்தா ரெனக்கை விடலுண்டோ தந்நெஞ்சத்து யாத்தாரோடு யாத்த தொடர்பு?

பல நாட்களும் அருகிலேயே இருப்பவர்களானாலும் உள்ளத்திலே சில நாட்களாகிலும் ஒன்றுபடாதவர்களோடு, அறிவுடையவர்கள் நட்புச் செய்யவே மாட்டார்கள். தம் உள்ளத்திலே அன்பாற் பிணிக்கப் பட்டிருப்பவர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பினை அவர்கள் பலநாட்களும் தம்மைவிட்டு நீங்கியிருக்கின்றனர் என்று கருதி, யாரும் விட்டுவிடுவது இவ்வுலகிலே உளதாகுமோ?