பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நாலடியார்-தெளிவுரை

‘இப்போது வெறுக்கப்படத்தக்கவளான இவளே முன்னர் ஆசை எழச் செய்பவளாயிருந்தாளே! இதனை உணர்ந்தாவது இளமையின் நிலையாமையை அறிந்து துறவு நிலையிலே மனங்கொள்க’ என்பது கருத்து. இறக்கும்-செல்லும், காழ்-உறுதி. மம்மர் - மோக மயக்கம். அணங்கு-தன் அழகால் பிறரை வருத்திக் கொல்லும் பெண் தெய்வம்.

15. எனக்குத் தாய்ஆகியாள் என்னையீங்கு இட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்;-தனக்குத்தாய் ஆகியவளும் அதுவானால், தாய்த்தாய்க் கொண்டு ஏகும் அளித்திவ் வுலகு. எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டுத், தனக்கு வேறொரு தாயை நாடி அடுத்த பிறவி எடுப்பதற்காகச் சென்று விட்டாள். அவளுக்குத் தாயாக இருந்தவளும் அப்படியே அவளை விட்டுவிட்டுப் போய் விட்டாள். இதுவே இவ்வுலகின் இயல்பானால், தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டே சென்று கொண்டிருக்கும்படியான ஏழைமையை உடையதுதான் இவ்வுலகமாகும் போலும்.

ஒருத்தி, இளமை மாறி முதுமை எய்திச் சாவை ஏற்று, இன்னொருத்தி வயிற்றிலே சென்று பிறக்கிறாள். அவளும் அப்படியே. இப்படிச் சாவதும் பிறப்பதுமாகப் போய்க் கொண்டே இருக்கும் இந்த உலகத்திலே இளமை என்பது ஒரு நிலையானதோ? என்பது கருத்து. அளித்து - ஏழைமை உடையது.

16. வெறியார் வெங்களத்து வேன்மகன் பாணி

முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல்.

வெறியாட்டமானது ஆடுதல் நிகழ்கின்ற கொடிய பலியிடுமிடத்திலே வேலை ஏந்தி வெறியாடுவோனாகிய வேன்மகனின் கையிலேயுள்ள, தளிர்கள் நிறைந்த நறுமண முடைய பூமாலையானது தன் முன்னே விளங்கிக் கொண்டிருக்கக் கண்ட ஆட்டுக் குட்டியானது, அந்தத் தளிரை உண்பது போன்ற நிலையில்லாத மகிழ்ச்சியினை உடையது இளமைப் பருவத்து இன்பங்கள் எல்லாம். அத்தகைய மகிழ்ச்சி அறிவுடையவர்களிடத்திலே ஒருபோதும் இருப்பதில்லை.