பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 13

இளமையிலே சிற்றின்ப வேட்கையிலே முழுகியிருந்த ஒருவனின் தளர்ச்சியுற்ற முதுமை நிலைமையைக் குறித்துச் சொன்னது இது. இதனால், இளமையின் இன்பம் எல்லாம் நிலையில்லாதன என்பது உணர்த்தப்பட்டது. அஃகினார். குறைந்தார். உட்காணாய் - உள்ளத்து உணராய். கலம்-மரக்கலம். நல்லார்-மகளிர். கலி-துன்பம், ‘கலுழ்’ எனவும் பாடம்.

13. சொல்தளர்ந்து, கோல்ஊன்றிச், சோர்ந்த நடையினராய்ப், பல்கழன்று, பண்டம் பழிகாறும்-இல்செறிந்து, - காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே ஏம நெறிபடரும் ஆறு.

இல்வாழ்க்கை என்னும் வாழ்விலே மிகவும் நெருக்கம் உடையவராயிருந்து, ஆசையின் வழியிலே செல்லுகின்ற அறிவு உடையவர்களுக்குத், தம் உயிருக்குப் பேரின்பத்தைத் தருகின்ற அரண் போன்ற துறவு நெறியிலே மனஞ் செலுத்துவதற்கான வகையே இல்லாமற்போய் விடுகின்றது. சொற்கள் தளர்வுற்றுப் போய், கையிலே தண்டினை ஊன்றிக் கொண்டு, தளர்ந்த நடையினை உடையவர்களாய்ப் பற்கள் அனைத்தும் கழன்று வீழ்ந்துபோக, அவர்களுக்கு உரிமையான உடலும் பழிக்கப்பட நேர்வதுதான், அவர்களுக்கு இறுதியிலே உண்டாவதாகும்.

சிற்றின்பத்திலே ஈடுபட்டு, உடலைத் தளரச் செய்து நலிவடையாமல், இளமையின் நிலையாமையை உணர்ந்து, அப்போதே காமநெறியை வெறுத்து, உயிருக்கு ஏமமாகிய துறவுநெறியிலே ஈடுபடுக என்பது கருத்து. பண்டம்-உடலாகிய பண்டம். பழிகாறும்-பழிப்பையடையும். கண்-அறிவு. ஏமம்அரண், உயிர்க்கு உறுதி தரும் பேரின்பம்.

14. தாழாத், தளராத் தலைநடுங்காத், தண்டூன்றா,

விழா இறக்கும் இவள்மாட்டும்-காழிலா மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.

மூப்பினாலே முதுகு கூனிப்போய், உடல் தளர்ச்சியுற்றுத் தலை நடுங்கிக் கொண்டிருக்கத், தண்டினை ஊன்றியவளாகத் தள்ளாடி விழுந்து விழுந்து செல்கின்றாள் இந்தக் கிழவி. உறுதியில்லாத மோகங்கொண்டு திரிகின்ற மாந்தர்களுக்கு, இவளுடைய கையிலிருக்கும் ஊன்று கோலானது, இவள் தாயின் கைக் கோலாக இருந்த காலத்திலே, இவளிடத்தும் காமத்தால் மிக்க வருத்தம் உண்டாகியிருக்கும் அல்லவோ?