பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாலடியார்-தெளிவுரை

ஒலிமுழங்கும் கடலினது குளிர்ந்த கரைகளை உடைய நாட்டின் தலைவனே! நல்ல நூல்களைக் கற்று அறிவுடைய வர்களாக விளங்குபவர்களுடைய நட்பானது நுனியிலிருந்து அடிநோக்கிக் கரும்பைத் தின்பது போலத் தொடக்கத்திலே சற்று உவர்ப்பாயிருந்தாலும் வரவர இனிமை தருவதாய் இருக்கும். கரும்பை நுனியிலிருந்து தின்னுதலை விட்டு, அடியிலிருந்து நுனிநோக்கித் தின்பதைப் போன்று, முதலிலே இனிமையாக இருந்தாலும், வரவர உவர்ப்பாகப் போய்விடுவது, கல்விப் பண்பற்ற அன்பில்லாதவர்களுடைய தொடர்பு ஆகும்.

‘கல்வியுடையவர் தொடர்பே நெடுங்காலம் இன்பந் தருவது என்று கூறிக் கல்வியின் சிறப்பு வலியுறுத்தப் பட்டது.

139. கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்,

நல்லறிவு நாளுந் தலைப்படுவர்-தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணிக்குத் தான்பயந் தாங்கு.

தொன்மையாகவே விளங்கும் சிறப்பினையும் பிரகாசமான நிறத்தினையும் உடைய பாதிரிப் பூவினைச் சேர்தலால், புதிதான பானையோடானதும் தன்னிடத்தேயுள்ள குளிர்ந்த நீருக்குத்தான் வாசனையைக் கொடுக்கும். அதுபோலவே படியாதவரேயானாலும் படித்தவருடன் சேர்ந்து நடப்பாரானால், அச்சேர்க்கை காரணமாக, நாள்தோறும் நல்ல அறிவு உண்டாகப் பெறுவார்கள். -

‘படியாமற் போனாலும், படித்தவருடைய தொடர்பாவது வைத்துக் கொள்ளவேண்டும்’ என்று சொல்வதன் மூலம், கல்வியின் சிறப்பைக் கூறுவது இது.

140. அலகுசால் கற்பின், அறிவு நூல் கல்லாது,

உலகுநூல் ஒதுவது எல்லாம்,-கலகல கூஉந் துணையல்லால், கொண்டு, தடுமாற்றம் போஒந் துணையறிவார் இல்.

அளவு மிகுந்த நூற்களினுள்ளே உண்மையான அறிவைத் தருகின்ற நூற்களைப் படியாது. இவ்வுலகத்துக்கே பயன்படுகின்ற நூற்களை மட்டுமே படிப்பதெல்லாம், கலகலவென்று கூவும் அளவை உடையதேயல்லாமல், அவ்வுலக நூற்களைப் படித்ததைக் கொண்டு, பிறவித் துன்பங்களினின்றும் தடுமாற்றத்தை நீக்கிக் கொள்ளும் தன்மையை அறிந்தவர் எவரும் இல்லை.